உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரசின் நிதியுதவி என்பது இப்படி தான் இருக்க வேண்டும்

அரசின் நிதியுதவி என்பது இப்படி தான் இருக்க வேண்டும்

கொரோனா பெருந்தொற்று தாக்கி, நகரங்கள் முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 2019, 2020களில் நம் நாட்டின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் முன்னணியில் இருந்தவர்கள், சாலையோர வியாபாரிகள். தினசரி விற்பனை முற்றிலும் நின்றதால், பலர் தங்களிடம் இருந்த குறைந்த சேமிப்பைச் செலவழிக்கவும், நகை, வீட்டுப் பொருட்கள் போன்றவை அடமானம் வைக்கவும், சிலர் தங்கள் விற்பனை வண்டிகள் மற்றும் சிறிய சொத்துக்களையே விற்று உயிர்வாழவும் வேண்டிய சூழல். அந்த கொரோனா காலத்திலிருந்து மீண்ட பிறகும், புதிய வண்டி, புதிய சரக்கு வாங்கவோ, வியாபாரத்தை மீண்டும் துவங்கவோ போதிய முதலீடு இல்லாததால், மறுபடியும் திண்டாடினர். பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கோ, கடன் வரலாறோ இல்லை; அடமானம் வைக்க சொத்துக்களோ பொருட்களோ இல்லாததால், கடன் பெறவும் முடியவில்லை. இத்தகைய சூழலில் தான் நிதி உதவி திட்டங்களின் முக்கியத்துவம் தெரிகிறது. சரியான நேரத்தில் கிடைக்கும் கடன், ஒரு விற்பனையாளரை மீண்டும் நிலைநிறுத்த உதவும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, 2020ல் 'பிரதமர் ஸ்வநிதி திட்டம்' என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளுக்கு பிணையற்ற கடனை அறிமுகப்படுத்தியது. இது தானமாக வழங்கப்படும் உதவியல்ல; மாறாக தெருவோர வியாபாரிகளை தாங்கும், முன்னேற்றும் ஒரு திட்டமாக வடிவமைக்கப்பட்டது. 10,000 ரூபாய் வேலை மூலதனக் கடன் வழங்கப்பட்டது. மேலும், சரியான காலக்கட்டத்தில் திருப்பிச் செலுத்துவோர் 20,000, பின்னர் 50,000 ரூபாய் கடன் பெறலாம் என உறுதி அளிக்கப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஈர்க்க, அரசாங்கம் 7 சதவீத வட்டி சலுகையையும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க 'கேஷ்பேக்' சலுகைகளையும் வழங்கியது. சுமார் 70 லட்சம் பேர் இந்த திட்டத்தின் பயனாளிகளாகினர். கடந்த 2023ல் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான வியாபாரிகள் இந்த கடன் தொகையை, முறையாக பயன்படுத்தியது தெரியவந்தது. சரக்குகளை வாங்க, விற்பனை வண்டிகளைப் பழுது பார்க்க இத்தொகை பயன்பட்டது. இதன் மூலம் அவர்கள் வருமானத்தை பெரிதும் உயர்த்தியிருந்தனர். அண்மையில் வங்கித் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று, இந்தத் திட்டம் தனது பரந்த இலக்கை அடைய துவங்கியிருப்பதை காட்டுகிறது. பயனாளர்களில் சுமார் 40 சதவீதம் பேர், முதல்கட்ட கடனை முடித்த பின், சந்தை போட்டி வட்டியில், 10,000 ரூபாய்க்கு 3 முதல் 4 மடங்கு அதிக கடன்களை பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் ரகசியம் திட்டத்தின் வடிவமைப்பில்தான் உள்ளது. மத்திய பட்ஜெட்டின் 0.1 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதி ஒதுக்கீடு இருந்தாலும், ஸ்வநிதி திட்டம், ஒரு நிதியுதவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான பாடப்புத்தக மாதிரியாக மாறியிருக்கிறது. சிறிய கடனில் துவங்கி, அதை சரியாக திருப்பி செலுத்திய பின், பெரிய கடன்கள் வழங்கப்பட்டதன் வாயிலாக, பலரது கடன் வரலாற்றை உருவாக்கி, நிதி ஒழுக்கம் நிரூபிக்கப்பட்டது. மேலும், நிதி சேவையை எட்டிப் பார்க்காத சாலையோர வியாபாரிகள் படிப்படியாக முறையான வங்கி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது, இரண்டாவது அம்சம். மூன்றாவதாக, மோசமான கொரோனா சூழலிலும், திட்டத்தில் இலவச சலுகைகள் இல்லை. அனைத்து நன்மைகளும் நல்ல நடத்தை, நேர்த்தியான திருப்பி செலுத்தல், டிஜிட்டல் பரிவர்த்தனை போன்றவற்றை உறுதி செய்தன. சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவது வங்கிகளுக்கு நம்பிக்கையையும், அபாய குறைப்பையும் வழங்கியது. அறிவார்ந்த கொள்கை வடிவமைப்பின் விளைவு இத்திட்டம் என்பதில் சந்தேகமில்லை. இந்த அடித்தளம் அளித்துள்ள நம்பிக்கையில், மத்திய அரசு தற்போது 'ஸ்வநிதி 2' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்கட்டத்தில் கடனை எட்டாதவர்களையும் அடைவதை நோக்கமாக இது கொண்டுள்ளது. அதிகமான கடன் வரம்புகள், எளிமையான நடைமுறைகள், திறன் மேம்பாட்டு கூறுகள் ஆகியவற்றையும் அரசு சேர்த்துள்ளது. இதனால், மேலும் பல தெருவோர வியாபாரிகள் முறையான நிதி அமைப்பில் இணைய வழிவகுக்கிறது. ஸ்வநிதி திட்டம், ஒரு நிதியுதவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான பாடப்புத்தக மாதிரியாக மாறியிருக்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை