கோவில்பட்டியில் விமானி பயிற்சி மையம் :தனியாருக்கு டிட்கோ நிறுவனம் அழைப்பு
சென்னை:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விமானி பயிற்சி நிலையம் அமைக்க தனியாருக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக, 31 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும் இடத்தில் தனியார் நிறுவனம், தன் செலவில் பயிற்சி நிலையத்தை அமைத்து, பராமரிக்க வேண்டும். நம் நாட்டில் சர்வதேச தரத்தில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும், விமான பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், விமானத்தை இயக்கும் பயிற்சி பெற பலர் வெளிநாடு செல்கின்றனர். இதற்காக ஒருவருக்கு சராசரியாக, 50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே, தமிழகத்தில், பொது - தனியார் கூட்டு முயற்சி வாயிலாக, விமான பயிற்சி நிலையத்தை அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. முதல் கட்டமாக, துாத்துக்குடி கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைக்க தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவில்பட்டியில் நாலாட்டின்புதுார், தோணுகல் கிராமங்களில், 100 ஏக்கர் நிலம் டிட்கோ வசமுள்ளது. அங்கு, லட்சுமி மில்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு விமான ஓடுபாதை உள்ளது. 25 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அந்த நிலம், அரசு வசமே வந்து விட்டது. முதல்முறையாக, விமானி பயிற்சிக்காக தனி ஓடுபாதையுடன், விமான பயிற்சி நிலையம், கோவில்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. அதை அமைக்கும் நிறுவனம் ஈட்டும் வருவாயில், ஒரு பங்கை, டிட்கோவுக்கு தர வேண்டும்” என்றார். கோவில்பட்டியில் நாலாட்டின்புதுார், தோணுகல் கிராமங்களில் 100 ஏக்கரில் விமானி பயிற்சி மையம்