வர்த்தக துளிகள்
போக்ஸ்வேகன் ரூ.10,000 கோடி முதலீடு
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான போக்ஸ்வேகன், 'இந்தியா 3.0' திட்டத்தின் கீழ், 2028 முதல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறக்குமதியில் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக இந்நிறுவனம் மீது வழக்கு நடந்து வரும் நிலையில், இம்முடிவை எடுத்துள்ளது. இந்தியர்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 'குஷாக், ஸ்லாவியா' ஆகிய பட்ஜெட் கார்களுக்கு பதிலாக, பிரீமியம் எஸ்.யு.வி., - எம்.பி.வி., மற்றும் மின்சார கார்களை அறிமுகம் செய்வதில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்த உள்ளது.
ட்ரீம்போக்ஸ் உடனான ஒப்பந்தம் முறிவு
இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஓய்வறை சேவைகளை வழங்கி வரும் ட்ரீம்போக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை முறித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் விமான நிலையங்களில் ஓய்வறைகள் திடீரென மூடப்பட்டதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விமானப் பயணியர் சிரமத்தை எதிர்கொண்டனர். சந்தையில் பட்டியலானது சீமென்ஸ் எனர்ஜி
சீமென்ஸ் எனர்ஜி பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் நேற்று பட்டியலிடப்பட்டன. ஜெர்மனியைச் சேர்ந்த தாய் நிறுவனமான சீமென்ஸ் ஏ.ஜி., வசமுள்ள 69 சதவீதம்; சீமென்ஸ் எனர்ஜி ஏ.ஜி.,யின் துணை நிறுவனங்கள் வசமுள்ள 6 சதவீதம் போக, மீதமுள்ள பங்குகள் சந்தையில் பட்டியலாகின. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியா 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு, வலிமையான ஆற்றல் அமைப்பு அவசியம். 'இந்தியாவின் இந்த முக்கிய பயணத்தில் ஆதரவளிக்க சீமென்ஸ் எனர்ஜி தயாராக உள்ளது' என தெரிவித்துள்ளது.டி.சி.எஸ்., கூட்டம்: சந்திரசேகரன் ஆப்சென்ட்
டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத் தில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக டி.சி.எஸ்., சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'கடந்த வாரம் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான விஷயங்களில் சந்திரசேகரன் கவனம் செலுத்தி வருவதால் பங்கேற்கவில்லை' என கூறப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.