வட்டி, அபராத தள்ளுபடியை பயன்படுத்துக
சென்னை:''ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யும் திட்டத்தை வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். தமிழக வணிக வரி துறையின் இணை ஆணையர்களின் பணித் திறன் குறித்த ஆய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ், 2017 - 18, 2018 - 2019, 2019 - 2020 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரி விதிப்பு ஆணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில், நிலுவையில் உள்ள வரி தொகையை, வரும் மார்ச்சுக்குள் செலுத்தும் பட்சத்தில், நிலுவையில் உள்ள வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யும் திட்டம், ஜி.எஸ்.டி., கவுன்சில் அறிவுறுத்தலின்படி நடைமுறையில் உள்ளது. எனவே, மேற்கண்ட ஆண்டுகளுக்கு வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வரியை செலுத்தி தள்ளுபடி பெறலாம்.இதுகுறித்து, ஏதேனும் சந்தேகம் இருப்பின், தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.