உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., எஸ்... என்.எப்.ஓ., நோ மாறி வரும் முதலீடடாளர் மன நிலை

ஐ.பி.ஓ., எஸ்... என்.எப்.ஓ., நோ மாறி வரும் முதலீடடாளர் மன நிலை

இந்திய முதன்மை சந்தையில் ஐ.பி.ஓ.,க்களுக்கு முதலீட்டாளர்களிடம் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் புதிய திட்டங்களான என்.எப்.ஓ.,க்களில் முதலீடு மந்தமாகியிருப்பது, தரவுகளில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 'பிரைம் டேட்டாபேஸ்' தெரிவித்ததாவது:அமெரிக்காவின் வரி தொடர்பான பிரச்னைகள், மேற்கு ஆசிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், 2026ம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிடுவதில் தயக்கம் காட்டின. இந்நிலையில், சந்தை சூழல் மேம்பட்டதையடுத்து சமீபகாலமாக ஐ.பி.ஓ., சந்தை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 33 ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக 49,592 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.மேலும், செபி ஒப்புதல் பெற்றுள்ள பல நிறுவனங்களின் அனுமதி காலாவதியாகும் நிலையில் இருப்பதால், நீண்ட காலமாக காத்திருந்த ஐ.பி.ஓ.,க்களும் தற்போது சந்தைக்கு வர தொடங்கியுள்ளன. செபி ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, நேற்று 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி வழங்கியுள்ள நிலையில், 'என்.எஸ்.இ.,' 'ரேசர்பே' உள்ளிட்ட நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க் களும் வரவிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மறுபுறம், என்.எப்.ஓ., சந்தையில் நிலைமை மாறுபட்டுள்ளது. 'ஆம்பி'யின் தரவுகளின்படி, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் என்.எப்.ஓ.,க்கள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தொடர்ந்து 3வது காலாண்டாக என்.எப்.ஓ., வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது.புதிய திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், அவற்றில் முதலீடு செய்யும் ஆர்வம் முதலீட்டாளர்களிடம் குறைந்திருப்பது தெரிகிறது.அதேநேரம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கம் வலுவாகவே உள்ளது தரவுகளில் தெரியவந்துள்ளது.ஐ.பி.ஓ., வெளியிடும் நிறுவனத்தின் நிதிநிலை, செயல்பாடு உள்ளிட்ட விபரங்கள் முதலீட்டாளர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். அதோடு, பட்டியலிடும் நாளிலேயேலாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால் ஐ.பி.ஓ.,க்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. ஆனால், என்.எப்.ஓ.,வில் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே தெரியாது. பண்டு மேலாளர், முதலீட்டு உத்தி, செயல்பாடு ஆகியவற்றை மதிப்பிடவும் காலம் தேவைப்படுகிறது. என்.எப்.ஓ.,வை விட, பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வது எனக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. முதலீடு செய்வதற்கு முன் வினியோகஸ்தரின் ஆலோசனையையும் கருத்தில் கொள்கிறேன்.- சுரேஷ் தியாகராஜன், முதலீட்டாளர்,காரப்பாக்கம், சென்னை

Gallery உடனடி லாபம் கருதி முதலீடு கூடாது தொடர்ந்து ஒரே மாதிரியான துறைகளை அடிப்படையாக கொண்ட திட்டங்களை விட, வித்தியாசமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என்.எப்.ஓ.,க்களுக்கு தற்போது வரவேற்பு இருக்கிறது. ஏ.ஐ., செமிகண்டக்டர் போன்ற வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளை அடிப்படையாக கொண்ட தனித்துவமான திட்டங்கள் வந்தால் முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திட்டத்தின் செயல்பாடு, முதலீட்டு அணுகுமுறை, நிதி மேலாளர், புரமோட்டர் மற்றும் திட்டத்தின் தனித்துவம் போன்றவற்றையும் முதலீட்டாளர்கள் கவனிக்கின்றனர். இதனால், பெயருக்கு புதிய திட்டம் என்பதை காட்டிலும், அதில் என்ன வித்தியாசமான முதலீட்டு வாய்ப்பு உள்ளது என்பதையே பார்க்கும் மனநிலை அதிகரித்துள்ளது. மாறாக, ஐ.பி.ஓ.,க்களில் முதலீடு செய்வதற்கு பட்டியலிடும் நாளிலேயே லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக உள்ளது. ஆனால், ஐ.பி.ஓ.,வாக இருந்தாலும், என்.எப்.ஓ.,வாக இருந்தாலும், விலை அல்லது உடனடி லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு முதலீடு செய்வது சரியான அணுகுமுறை இல்லை. - சித்ரா நாகப்பன் மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர் மியூச்சுவல் பண்டு பதிவு எண்: ARN98425 என்.எப்.ஓ., வசூலில் சரிவு (2026) காலம் என்.எப்.ஓ., வசூல் ஜனவரி-மார்ச் ரூ.10,661 கோடி ஏப்ரல்-ஜூன் ரூ.1,759 கோடி வலுவான எஸ்.ஐ.பி., முதலீடு (2026) மாதம் எஸ்.ஐ.பி., முதலீடு ஏப்ரல் ரூ.31,115 கோடி மே ரூ.30,954 கோடி ஜூன் ரூ.31,781 கோடி ஐ.பி.ஓ.,வில் முதலீடு செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுவேன். ஏனென்றால், அதில் லாபம் கிடைக்கிறதா இல்லையா என்ற முடிவு விரைவாக தெரிந்து விடுவதுதான். தேவைப்பட்டால் விற்று பணத்தை எடுத்துக்கொள்ளவும் முடியும். ஆனால், என்.எப்.ஓ.,வில் முதலீடு செய்தால் அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. அதற்கு காலம் தேவைப்படும். எனவே, என்.எப்.ஓ.,வை விட ஏற்கனவே நல்ல செயல்பாட்டில் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் வினியோகஸ்தரின் ஆலோசனையை பெற்று முதலீடு செய்வது எளிதாக இருக்கிறது. - முருகப்பன், முதலீட்டாளர், துபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ