உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வாரிசுரிமை சட்டத்தில் அட்டகாசமான திருத்தம்! உயிலுக்கு இனி புரோபேட் கட்டாயமில்லை

 வாரிசுரிமை சட்டத்தில் அட்டகாசமான திருத்தம்! உயிலுக்கு இனி புரோபேட் கட்டாயமில்லை

வாரிசுரிமை சட்டத்தில், மத்திய அரசு முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கட்டா ஆகிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு, இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டமான 'கட்டாய புரோபேட்' முறையை அரசு தளர்த்தியுள்ளது. இதன் வாயிலாக, இனி உயில் வாயிலாக வரும் சொத்துக்களை மாற்ற, நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சென்னை, மும்பை, கொல்கட்டாவில் உள்ள ஒருவர் உயில் எழுதி வைத்திருந்தாலும், அந்த உயில் உண்மையானது தான் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து, 'புரோபேட்' என்னும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் வாங்கினால் மட்டுமே சொத்தை வாரிசுகள் பெயருக்கு மாற்ற முடியும். இதைத் தான் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வாரிசுரிமை சட்டப் பிரிவு '213' சொன்னது. குடும்பத்துக்குள் சண்டையே இல்லை என்றாலும், இந்த நீதிமன்ற நடைமுறை கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக பணமும், நேரமும் செலவானது. இப்போது பார்லிமென்ட் இந்தச் சட்டப் பிரிவை தளர்த்தியுள்ளதால், நீதிமன்ற அனுமதி இல்லாமலே, உயிலை நேரடியாக அமல்படுத்த முடியும்.

முக்கியத்துவம்

இந்த திருத்தம் முக்கியத்துவம் பெறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கட்டா ஆகிய நகரில் எழுதப்பட்ட உயில்களோ, அல்லது அங்கே இருக்கும் சொத்துக்களின் மீது எழுதப்படும் உயில்களுக்கோ தான் இந்த 'கட்டாய புரோபேட்' இருந்தது. மற்ற பகுதிகளில் எழுதப்பட்ட உயில்களுக்கு இது பொருந்தாது. அதாவது ஆங்கிலேயர் காலத்தில் 'பிரெசிடென்சி நகரங்களாக' இருந்தவை இவை. அதனால், இந்தச் சட்டம் இருந்தது. ஆனால், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர், நகரங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு பல சிக்கல்களை ஏற்படுத்தியது. தற்போது, சட்டத்திருத்தத்தின் வாயிலாக, அந்த அநீதி களையப்பட்டு உள்ளது. இன்னொரு அம்சம், இந்த 'கட்டாய புரோபேட்' என்பது, ஹிந்து, பவுத்த, சீக்கிய, ஜெயின, பார்ஸி குடும்பங்களைச் சேர்ந்தோர் எழுதும் உயில்களுக்கு மட்டுமே பொருந்தும். இதர சமயத்தினருக்குப் பொருந்தாது. அரசு செய்துள்ள தளர்வினால், இந்தப் பாகுபாடும் களையப்பட்டுள்ளது. அதேநேரம், 'புரோபேட்' என்ற நடைமுறை முழுமையாக நீக்கப்படவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அது 'கட்டாயம்' என்ற நிலையில் இருந்து 'தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம்' என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பலன்கள்

சென்னையில் ஒரு வயதானவர், வங்கியில் 15 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வைத்துள்ளார் என்று கருதுவோம். அவர் இறந்த பின், அந்தப் பணத்தை மகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என உயில் எழுதியிருக்கிறார். ஆனால், வங்கி வைப்பு நிதிக் கணக்கில் வாரிசுதாரர் பெயர் இல்லை என்று வைத்துக்கொள்வோம். இதற்கு முன்பு, வங்கி அதிகாரிகள், 'பெரிய தொகை என்பதால் கோர்ட் உத்தரவு வேண்டும்' என்று பிடிவாதம் பிடிப்பர். இனி புதிய சட்டத்தின்படி, வங்கி மேலாளர்கள் உயிலை ஏற்றுக்கொண்டு, ஓர் எளிய உறுதிமொழிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டு, பணத்தை விடுவிக்கலாம். தாத்தா காலத்தில் வாங்கி வைத்திருந்த பழைய பங்குகளை, பேரன்கள் பெயருக்கு மாற்ற, முன்பு கோர்ட் அனுமதி தேவைப்பட்டது. அந்தப் பங்குகளின் மொத்த மதிப்பில் ஒரு பெரும் தொகை வழக்கறிஞர், நீதிமன்றச் செலவுக்கே போய்விடும். இனி, அந்தத் தேவையற்ற செலவுகள் இல்லை. உயிலை வைத்து நேரடியாகப் பங்குகளை மாற்றிக்கொள்ளலாம்.

நீதிமன்றம்?

பல குடும்பங்களில் மூதாதையர் சொத்து என்பது வெறும் பணமதிப்பு மட்டும் கொண்டதல்ல, அதற்கு உணர்வு ரீதியான தொடர்புகளும் இருக்கும். எனவே, குடும்பத்தில் அமைதியும் இணக்கமும் இருந்தால் மட்டுமே, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும். ஒருவேளை, யாரேனும் உறவினர், 'இந்த உயில் போலியானது' என்று சண்டைக்கு வந்தால், அப்போது நீங்கள் நீதிமன்றம் சென்று, 'புரோபேட்' வாங்குவதே பாதுகாப்பானது. சண்டை இல்லாத பட்சத்தில், இனி நீதிமன்றப் படிகளை ஏற வேண்டிய அவசியமில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை