உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஒரு மணி நேரத்தில் செக் பாஸ் ஆகும்! ஆர்.பி.ஐ., விதிமுறை இன்று முதல் அமல்

ஒரு மணி நேரத்தில் செக் பாஸ் ஆகும்! ஆர்.பி.ஐ., விதிமுறை இன்று முதல் அமல்

கா சோலை பணமாவதற்கு பல நாட்கள் காத்திருந்த காலம் இன்று மலையேறுகிறது. காசோலையை விரைவாக கிளியரிங் செய்வதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை இன்று அமலுக்கு வருகிறது. காசோலை, இனி ஓரிரு மணி நேரத்தில் கிளியர் ஆகி விடும். கிளியர் ஆன, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும். இதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள கால அளவு, மூன்று மணி நேரம். ஆனால், காசோலை பெறும் வங்கி, விரைவாக கிளியர் செய்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் கணக்கில் பணம் வந்து விடும்.

புதிய நடைமுறை

* டிபாசிட் செய்யப்படும் காசோலைகள் குறித்த தகவல்கள், ஸ்கேன் செய்யப்பட்ட காசோலை படம் போன்றவை உடனுக்குடன் பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கு அனுப்பப்படும் * காசோலை அங்கீகரிக்கப்பட்டு விட்டால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும் * குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்த வேண்டிய வங்கியிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றால், அந்த காசோலை, தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு, பணம் வழங்கப்படும்.

காலக்கெடு

ரிசர்வ் வங்கி இந்த புதிய நடைமுறையை இரண்டு கட்டங்களாக செயல்படுத்துகிறது. முதல் கட்டம் (அக்டோபர் 4 - ஜனவரி 2, 2026 வரை): காசோலைகளை சரிபார்த்து தகவல் அனுப்ப மாலை 7 மணி வரை காலக்கெடு இரண்டாம் கட்டம் (ஜனவரி 3, 2026 முதல்): வங்கிகள் சரிபார்ப்பதற்கு வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே காலக்கெடு. உதாரணமாக, காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பெறப்படும் காசோலைகளுக்கு, மதியம் 2 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும். இரண்டு கட்டங்களிலுமே, செக் கிளியரிங் ஆகி விட்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

அசால்ட்டாக இருக்க வேண்டாம்

காசோலை வழங்கினால், உள்ளூராக இருந்தால் ஓரிரு நாட்கள்... வெளியூராக இருந்தால், மேலும் சில நாட்கள் என பணம் வரவு வைக்கப்படுவது இதுவரை வங்கிகளின் வழக்கம். இதனால், இடைப்பட்ட நாட்களில் பணத்தை எடுத்து செலவழித்து விட்டு, காசோலை பாஸ் ஆவதற்குள் மீண்டும் கணக்கில் செலுத்தி விடுவோர் உண்டு. குறிப்பாக, வணிகர்கள் ஓரிரு நாள் ரொட்டேஷனுக்கு இதுபோல பணத்தை எடுப்பர். அதே ஞாபகத்தில் இனி, காசோலையை கொடுத்து விட்டு, அதற்குரிய தொகையை வங்கிக் கணக்கில் விட்டு வைக்காமல் எடுத்தால் ஆபத்து தான். ஏனெனில், காசோலை பணமின்றி பவுன்ஸ் ஆனால், வழக்கை சந்திக்க நேரிடலாம். வங்கியின் அபராத கட்டணமும் கட்டாயம் பதம் பார்த்து விடும். ஒரு சில மணி நேரத்தில் காசோலை இனி பாஸ் ஆகும் என்பதால், கொடுத்த தொகையில் கைவைக்காமல், நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ