ஆ ங்கில புத்தாண்டின் முதல் நாளிலேயே, அரசு கடன் பத்திரங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருவாய் அதிகரித்துள்ளது. கடன் பத்திரங்களின் விலை குறையும்போது, அதன் வட்டி விகிதம் உயரும் என்பது சந்தை விதி என்பதால், 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 6.58 சதவீதத்தில் இருந்து 6.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், நடப்பு காலாண்டில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புதிய கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், சந்தையில் கடன் பத்திரங்களின் வரத்து அதிகமாக இருக்கும். இதைதவிர, மத்திய அரசு 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை ஏலம் விடுகிறது. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்ற தயக்கம் சந்தையில் நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால், அரசு கடன் பத்திரங்களின் மதிப்பு, தற்காலிகமாக சரிந்துள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். விலை குறைந்தால் வட்டி ஏன் உயர்கிறது? இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம். அரசாங்கம் ஒரு பத்திரத்தை 100- ரூபாய்க்கு வெளியிடுவதாகவும் அதற்கு ஆறு ரூபாய் வட்டி தருவதாகவும் வைத்துக் கொள்வோம். அதாவது 6 சதவீதம் வட்டி. இந்நிலையில், ஒருவேளை சந்தையில் இந்தப் பத்திரத்தை வாங்க ஆள் இல்லை அல்லது விற்பவர்கள் அதிகம் எனில், அதன் விலை 90 ரூபாயாக குறைந்துவிடுவதாகவும் கருதிக் கொள்வோம். ஆனால், அரசாங்கம் கொடுக்கும் வட்டியோ மாறாது. அதே 6 ரூபாய்தான். சரி, இப்போது ஒருவர் 90 ரூபாய் முதலீடு செய்து 6 ரூபாய் லாபம் பெறுகிறார் எனில், அவரது லாப சதவீதம் 6.66% ஆக உயர்ந்துவிடுகிறது இல்லையா? அதாவது பத்திரத்தின் விலை குறைந்தால், வாங்குபவருக்குக் கிடைக்கும் லாப சதவீதம் அதுவாகவே உயர்ந்துவிடுகிறது. விலை ஏன் வீழ்ச்சியடைந்தது? 1 மத்திய மற்றும் மாநில அரசுகள் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய கடன் பத்திரங்களை வெளியிட உள்ளன. சந்தையில் அதிகப்படியான பத்திரங்கள் வரும்போது, அதன் மதிப்பு குறைகிறது. 2 இன்று 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலம் நடைபெற இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை முதலீட்டாளர்கள் வாங்குவார்களா என்ற பயம் சந்தையில் உள்ளது. வாங்குவதற்கு ஆள் குறைவாக இருந்தால், விலை இன்னும் குறையும். இது நல்லதா, கெட்டதா? புதிய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஏனெனில், பத்திரங்களின் விலை குறைவாக இருப்பதால், அவர்கள் முதலீடு செய்யும் போது, அதிக வட்டி வருவாய் கிடைக்கும். ஏற்கனவே பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பத்திரத்தின் சந்தை மதிப்பு தற்போது குறைந்திருக்கும்.