மேலும் செய்திகள்
போர்ட்போலியோ
22 hour(s) ago
ஃபண்டு பயோடேட்டா
22 hour(s) ago
தங்கம், வெள்ளி விலை சரிந்ததன் எதிரொலியாக, அவற்றை அடிப்படையாக கொண்ட ஈ.டி.எப்.,களின் விலையும் நேற்று சரிந்தன. எம்.சி.எக்ஸ்., சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததை தொடர்ந்து, ஈ.டி.எப்.,களிலும் சரிவு ஏற்பட்டது. என்ன காரணம்?
தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்ட சரிவுக்கு சர்வதேச சந்தை நிலவரம் முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட கடுமையான கருத்துக்களை தொடர்ந்து, செப்டம்பரில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் உயரும்போது, அமெரிக்க பத்திரங்களின் வருவாய் விகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வட்டி வருவாய் அளிக்காத தங்கம், வெள்ளி போன்ற முதலீடுகளின் மீதான ஈர்ப்பு குறையலாம். மேலும், டாலர் மதிப்பு உயர்ந்தாலும் தங்கம், வெள்ளியில் அழுத்தம் ஏற்படும். இதனுடன், கச்சா எண்ணெய் விலை உயர்வும் சந்தையின் கவலையை அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு தாமதமாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகிறது. இதுவும் தங்கம், வெள்ளி விலையில் குறுகிய கால அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளியில் ஏன் சரிவு?
பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள் மாறும்போது, வெள்ளிக்கான தொழில்துறை தேவை குறித்த கணிப்புகளும் மாறக்கூடும். இதனால், சந்தையில் சாதகமற்ற சூழல் உருவாகும்போது வெள்ளியின் விலையில் ஏற்படும் தாக்கம் தங்கத்தைவிட அதிகமாக இருக்கலாம். அதனால்தான், நேற்று தங்க ஈ.டி.எப்.,களைவிட வெள்ளி ஈ.டி.எப்.,களில் சரிவு சற்று அதிகமாக இருந்தது. எனவே, வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் அதன் அதிக ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொள்வது அவசியம். கவனிக்க வேண்டியது
தங்கம் அல்லது வெள்ளி ஈ.டி.எப்.,களின் விலை ஒரு நாளில் சரிவதை மட்டும் வைத்து முதலீட்டு முடிவு எடுக்கக்கூடாது. குறிப்பாக, வெள்ளியில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதால், குறுகிய காலத்தில் கிடைக்கும் லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்த லாம். எனவே, முதலீடு செய்யும் முன் அமெரிக்க வட்டி விகிதம், டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் உள்ளிட்ட காரணிகளை கவனித்து, இடர் தாங்கும் திறனுக்கு ஏற்ப முடிவு எடுப்பது அவசியம்.
தங்கம், வெள்ளி மீதான அதிக இறக்குமதி வரி எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், அதை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ரத்தினம் மற்றும் நகை கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இறக்குமதி பெரிய அளவில் குறையவில்லை. மாறாக, சட்டவிரோதமான வர்த்தகம் அதிகரித்துள்ளதாக நகைத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இறக்குமதி வரியை குறைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
22 hour(s) ago
22 hour(s) ago