| ADDED : டிச 30, 2025 02:12 AM
சர்வதேச சந்தையில், காப்பர் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்தின் எதிரொலியாக, 'ஹிந்துஸ்தான் காப்பர், ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனங்களின் பங்குகள் விலை, இந்த டிசம்பர் மாதத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனப் பங்குகள் நடப்பு மாதத்தில் மட்டும் 67 சதவீதம் உயர்ந்து, 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 546 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனப் பங்குகள் இந்த மாதத்தில் 35.3 சதவீதம் உயர்ந்து 656 ரூபாய் என்ற நிலையை எட்டியது. சர்வதேச சந்தையில், டிசம்பர் மாதத்தில் காப்பர் விலை 12.50 சதவீதம் உயர்ந்ததும், வெள்ளி விலை 46 சதவீதம் வரை அதிகரித்ததும் இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணம். இந்த பங்குகள் தற்போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உயர்ந்துள்ளதால், இவைகளின் விலை 10-15 சதவீதம் வரை குறையும் வரை காத்திருந்து வாங்குவதே சிறந்தது என 'எச்.டி.எப்.சி., செக்யூரிட்டீஸின்' ரிசர்ச் பிரிவு தலைவர் தேவர்ஷ் வகீல் தெரிவித்துள்ளார். காப்பருக்கான தேவை அதிகமாக இருப்பதால், அதில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.