தாமதமாக பணம் செலுத்துவதால் ஏற்படும் நிதி பாதிப்புகள் !
மாதத்தவணை மற்றும் பில் தொகைகளை குறித்த காலத்தில் செலுத்துவதன் அவசியத்தை உணர்ந்து செயல்படுவது அவசியம்.நடுத்தர வர்கத்தினரை பொருத்தவரை மாதாந்திர பட்ஜெட்டை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்பதோடு, கடன் தவணை உள்ளிட்டவற்றை தள்ளிப்போடாமல் இருப்பதும் மிகவும் அவசியம். பில் தொகைகளை உரிய காலத்தில் செலுத்தாமல் இருப்பது செலவுகளை திட்டமிடுவதை சிக்கலாக்குவதோடு, நிதி நோக்கிலும் மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக கடன் தகுதியை தீர்மானிக்கும் கிரெடிட் ஸ்கோரை பாதித்து பெரும் தாக்கத்தை உண்டாக்கும். பணம் செலுத்துவதில் ஒரு முறை தாமதம் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மிகுந்ததாக இருக்கும். கடன் தகவல்கள்
தனிநபர்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, கடன் தகுதியை தீர்மானிப்பதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பது கடன் கிடைப்பதை எளிதாக்குவதோடு, சாதகமான வட்டி விகிதம் பெறவும் உதவும். எனவே நல்ல முறையில் கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். கடன் தவணை மற்றும் பில் தொகைகளை உரிய காலத்தில் செலுத்தி வருவது கடன் வரலாற்றை வலுவாக்கி, கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவுகிறது.அதே நேரத்தில், கடன் தவணையை செலுத்த தவறுவது பாதிப்பை உண்டாக்கும். பில் தொகைகளை தாமதமாக்குவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். தவணைத் தொகையை செலுத்துவதில் ஒரு முறை செய்யும் தாமதம் கூட அதிக பாதிப்பை உண்டாக்கும். பொதுவாக கடன் வழங்கும் வங்கிகள், தவணை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கின்றன. இந்த காலத்தில் பணம் செலுத்தவில்லை எனில் தவணை தவறுவதாக கருதப்பட்டு, இதற்காக அபராதமும் விதிக்கப்படலாம். அதோடு இந்த தகவல் கடன் அறிக்கை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும். மீட்சி கடினம்
தவணை தவறும் தகவல் தெரிவிக்கப்படும் போது அதற்கேற்ப கிரெடிட் ஸ்கோர் குறையும். இதனால் வருங்காலத்தில் கடன் பெறுவது அல்லது கிரெடிட் கார்டு பெறுவது சிக்கலாகலாம். தவணை தவறிய விவரம், கிரெடிட் அறிக்கையில் 36 மாதங்கள் வரை இடம் பெற்றிருக்கும். இது மோசமான கடன் பழக்கத்தை குறிப்பதாக அமையும். தவணை தவறிய 90 நாட்களுக்குள் பணம் செலுத்தி விட்டால், தாக்கத்தை குறைக்கலாம். எனினும், 90 நாட்களுக்கு மேல் இருந்தால் வாரா கடனாகி பாதிப்பும் அதிகமாக இருக்கும்.தவணை தவறுவது தவிர மேலும் கடன் சிக்கல், பில் செலுத்துவதில் தாமதம் இருந்தால் இன்னும் சிக்கலாகும். ஒரு முறை தாமதம் ஆனாலும், அதை சரி செய்து மீண்டு வர அதிக காலம் தேவைப்படலாம். கிரெடிட் ஸ்கோரை பழைய நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். எனவே, கடன் நிர்வாகத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கடன் பெறுவதற்கு முன் திரும்பி செலுத்தும் தன்மையை கவனத்தில் கொள்வதோடு, கடன் பெற்ற பிறகு உரிய காலத்தில் தவணையை செலுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் பராமரிப்பதில் மட்டும் அல்லாமல் கடன் வலையில் சிக்காமல் இருக்கவும் இது உதவும்.