போலந்துக்கு ஆடை ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்தது
திருப்பூர்: வங்கதேச அரசியலில் குழப்பம் நீடிக்கும் சூழலில், ஐரோப்பிய நாடுகளின் திசைமாறிய ஆர்டர்களால், போலந்து நாட்டுக்கு நம் நாட்டின் ஆடை ஏற்றுமதி, 35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில், நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அபார வளர்ச்சி பெற்றிருந்தது. அதில், தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு மட்டும், 2,964 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டான 2023 -24ல் இது 2,718 கோடி ரூபாயாக இருந்தது. எனினும், நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 'டாப் - 10' நாடுகள் பட்டியலில் இருந்த ஆஸ்திரேலியா, பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்றுமதியில் பெரிய சரிவு இல்லாவிட்டாலும், வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், விலை மலிவாக வழங்கி, அதிக ஆர்டர்களை கைப்பற்றுவதால் ஏற்றுமதி வளர்ச்சி மந்தமாகி விட்டது. ஆஸ்திரேலியாவின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில், போலந்துக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், 1,175 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது; முந்தைய ஆண்டின் இதே காலத்தில், இது 860 கோடி ரூபாயாக இருந்தது. திசைமாறும் ஆர்டர்கள் 'அபாட்' எனப்படும் அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறுகையில், “ஐரோப்பிய நாடுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆடைகளை விரும்புவதால், நம் நாட்டை தேர்வு செய்கின்றன. இதன் காரணமாகவே, 'டாப் 10' நாடுகள் வரிசையில் முதன்முதலாக போலந்து இடம் பெற்றுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள், நம் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன,” என்றார்.