இந்தியாவின் ஒருமைப்பாட்டுடன் ஆழமான பிணைப்பில் உள்ளோம் விளம்பர சர்ச்சைக்கு மலபார் கோல்டு விளக்கம்
மும்பை: இந்தியாவின் பாரம்பரியம், கைவினைத்திறன் மற்றும் ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை ஆகியவற்றுடன் தாங்கள் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளதாக மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை தலைமையிடமாக கொண்ட மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்துக்கு, இந்தியா மட்டுமின்றி, 14 நாடுகளில் 410க்கும் மேற்பட்ட நகை விற்பனை கடைகள் உள்ளன.
கண்டனம்
கடந்த செப்டம்பரில், லண்டனில் புதிய நகைக்கடையை திறந்த இந்நிறுவனம், கடையை விளம்பரப்படுத்த பாகிஸ்தானை சேர்ந்த இன்ஸ்டா பிரபலத்தை பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபலத்தை அழைத்தது தொடர்பாக, பலர் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதனால், மலபார் நிறுவனத்தின் பண்டிகை கால விற்பனை வீழ்ச்சி கண்டது. இதனையடுத்து, தன் 27,500 ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கடந்த செப்டம்பரில், லண்டனை சேர்ந்த பாகிஸ்தானிய இன்ஸ்டா பிரபலமான அலிஷ்பா காலித் என்பவருடன் விளம்பர நிறுவனம் ஒப்பந்தம் செய்து, கடை திறப்பில் பங்கேற்க செய்தது. ஒப்பந்தம் முறிவு
அவர் இந்தியாவுக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டவர் என தெரியவந்தபோது, உடனடியாக அவரது தொடர்பையும், அவரை அமர்த்திய நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் முறித்து விட்டோம். நாங்கள் இந்தியர்கள் என்பது எங்கள் தயாரிப்பு, இருப்பில் மட்டுமின்றி, மனப்பான்மை மற்றும் தார்மீகக் கோட்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், மும்பை உயர் நீதிமன்றத்தை மலபார் நிறுவனம் நாடியது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நிறுவனத்திற்கு எதிரான சமூக வலைதளங்களில் இடம்பெற்ற அனைத்து அவதுாறு பதிவுகளையும் நீக்க உத்தரவிட்டது. நகை கடை திறப்பில் பங்கேற்றவர், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டவர் என தெரியவந்தபோது, உடனடியாக அவரது தொடர்பையும், அவரை அமர்த்திய நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் நிறுத்தியதாக மலபார் கோல்டு விளக்கம்