ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு உள்நாட்டில் 510 டன்னாக அதிகரிப்பு
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பில், உள்நாட்டு கையிருப்பின் பங்கு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாத இறுதியில் 50 சதவீதமாக இருந்த ரிசர்வ் வங்கியின் உள்நாட்டு தங்க கையிருப்பு, செப்டம்பர் இறுதியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு 618 மெட்ரிக் டன்னிலிருந்து, 854 மெட்ரிக் டன்னாக அதிகரித்துஉள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது:கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 854.73 டன்னாக இருந்தது.இதில், உள்நாட்டு தங்க கையிருப்பு 510.46 டன்னாகவும்; பேங்க் ஆப் இங்கிலாந்தில் 324.01 டன்னும்; பேங்க் பார் இன்டர்நேஷனல் செட்டில்மென்டில் 20.26 டன்னும் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தங்க கையிருப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 408 டன்னாக இருந்த நிலையில், செப்டம்பருக்குள் கிட்டத்தட்ட 100 டன் அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு, கடந்த மார்ச் மாத இறுதியில் 8.15 சதவீதமாக இருந்தது. செப்டம்பரில் இது 9.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கிட்டத்தட்ட 4.95 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று, அன்னிய செலாவணி கையிருப்பு முதல் முறையாக 700 கோடி அமெரிக்க டாலரை கடந்து, இந்திய ரூபாயின் மதிப்பில் 59.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது இந்தியாவிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு, கிட்டத்தட்ட அடுத்த 12 மாதங்களுக்கான இறக்குமதியை சமாளிக்க போதுமானதாகும்.நடப்பாண்டில் கடந்த அக்டோபர் 11ம் தேதி வரை, உலகிலேயே அதிக அன்னிய செலாவணி கையிருப்பை திரட்டிய நாடுகளின் பட்டியலில், சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.