உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள் : ஒன்பது காரட் தங்கத்தை வாங்கலாமா?

ஆயிரம் சந்தேகங்கள் : ஒன்பது காரட் தங்கத்தை வாங்கலாமா?

ஒரு வினியோகஸ்தர் வழியாக மியூச்சுவல் பண்டு முதலீடு செய்வது பாதுகாப்பானதா; அல்லது, பல்வேறு வினியோகஸ்தர்கள் வழியாக முதலீடு செய்வது சரியா? வினியோகஸ்தருக்கு ஏதேனும் ஆகிவிட்டால், முதலீடு செய்த பணம் என்ன ஆகும்? எஸ்.சிவகுமார், மின்னஞ்சல் மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர், நீங்கள் செலுத்தும் பணத்தை தானே வைத்துக்கொள்ள போவதில்லை. எந்த பண்டில் முதலீடு செய்கிறீர்களோ, அந்த நிறுவனத்தில் தான் கட்டுவார். மேலும், இன்றைக்கு யாருமே ரொக்கமாக வாங்குவதில்லை. காசோலை அல்லது நேரடி வங்கி பரிவர்த்தனை வழியே தான் மியூச்சுவல் பண்டு முதலீடு நடைபெறுகிறது. வினியோகஸ்தர் இங்கே வழிகாட்டுபவர் மட்டுமே. மேலும், இப்போதெல்லாம் அத்தகைய ஆலோசகர் இல்லாமலேயே நீங்களே நேரடியாக மியூச்சுவல் பண்டுகளின் வலைதளத்துக்குப் போய் நேரடியாக முதலீடு செய்யவும் வழி வகை உள்ளது. ஒரு வினியோகஸ்தரா, பல வினியோகஸ்தரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. எப்படிப்பட்ட பண்டுகளை தேர்வு செய்கிறீர்கள்? அது, உங்கள் இலக்குக்கு உரிய வகையில் ரிட்டர்ன் தருகிறதா என்பது தான் முக்கியம். பரவலாக்கம் என்பது வினியோகஸ்தரிடம் இல்லை; முதலீடு செய்யும் திட்டங்களில் தான் இருக்க வேண்டும். குடும்ப வரவு - செலவுகளை துல்லியமாக நிர்ணயிப்பதற்கான வழிமுறைகள் எவை? செ.செல்வக்கோபெருமாள், காஞ்சிபுரம் பன்னிரெண்டு மாதங்களுக்கு, ஒவ்வொரு நாளும் நடைபெறும் செலவுகளையும், பெறக்கூடிய வருமானத்தையும், ஒரு எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்து வாருங்கள். பின்னர் அவற்றை வகைப்படுத்துங்கள். வரவுகளுக்கான பிரிவுகள் அதிகம் இராது; அதிகபட்சம் சம்பளம், வட்டி போன்றவை மட்டுமே இருக்கும். செலவுகள் என்ற வகையின் கீழ் தான் பல்வேறு பிரிவுகள் தோன்றும். 'வீட்டுச் செலவு'களின் கீழ் மளிகை சாமான்கள், காய்கறிகள், எரிவாயு உருளை, பால், வாடகை, மின்சார கட்டணம், போன் பில், ஹோட்டல் சாப்பாடு, வீட்டுக்கே வரவழைத்து சாப்பிடுவது ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பள்ளி கட்டணம், வேன் கட்டணம், புத்தகம், பென்சில், பேனா செலவுகள் ஆகியவற்றை 'கல்வி' என்று எழுதிக் கொள்ளுங்கள். சினிமா, டிராமா, ஓ.டி.டி., கேபிள் கட்டணம் போன்றவற்றை 'கேளிக்கை' என்ற தலைப்பிலும், பெட்ரோல், டீசல், பேருந்து, ரயில் கட்டணங்கள், பராமரிப்பு செலவுகள், வெளியூர் பயணங்கள் ஆகியவற்றை 'போக்குவரத்து' என்ற தலைப்பிலும், ஆடைகள், தையல் கூலி, ரெடிமேட் முதலியவற்றை 'துணிமணி' பிரிவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேறு உபரி லாகிரி செலவுகள் இருந்தால், அதை தனியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இப்படியெல்லாம் எழுதி வந்தால், ஒரே ஆண்டில் நீங்கள் வரவு - செலவுகளை துல்லியமாக நிர்ணயிக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் வேதாந்தியாகவும் ஆவதற்கான வாய்ப்புகளே அதிகம். இப்போது பரவலாக பேசப்படும் '9 காரட் ' தங்கம் வாங்கலாமா? அது பற்றிய முழு விபரம் தாருங்கள். ச.கண்ணன், திண்டுக்கல் இந்திய தர நிர்ணய அமைப்பின் ஹால்மார்க் பிரிவில் 9 காரட் நகைகளும் சேர்ந்துள்ள நிலையில், இப்படி ஒரு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. இதில், 37.5 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும்; மீதமுள்ள 62.5 சதவீதத்தில் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் இருக்கும். தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் போல் ஒன்றை அணிந்து கொள்ள விரும்புவோருக்காக, பேஷன் டிசைனர்கள் குறைந்த தரமுள்ள தங்கத்தில் பல ஆபரணங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த உருப்படிகளுக்கு மறுவிற்பனை மதிப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை. தங்கம் வாங்க வேண்டும் என்று விரும்பினால், 22 காரட் தங்கம் வாங்குங்கள் அல்லது தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்துவிட்டு, ஹாயாக இருங்கள். நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய இந்திய அரசு கடன் பத்திரங்கள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை அரசு துறையில் 10 ஆண்டுக ள் கடன் பத்திரங்கள், 6.81 சதவீத வருவாயைத் தான் ஈட்டித் தருகின்றன. கார்ப்பரேட் பாண்டுகள் பக்கம் போனால், 13 சதவீதம் வரை ரிட்டர்ன் கிடைக்கிறது. உங்களுக்கு கடன் பத்திர சந்தை பற்றி விரிவாகவும், ஆழமாகவும் தெரியும் என்றால், இதில் இறங்குங்கள். சாதாரணமாக, பொதுமக்களுக்கு இந்த விஷயத்தில் போதுமான அறிமுகம் இல்லை என்பதால், இவற்றை விளக்கி சொல்வது கஷ்டமான ஒன்று. நமது பத்திரிகையின் 'லாபம்' பக்கத்தில் இது குறித்து விரைவில் விளக்கங்களை தருவார்கள் என எதிர்பார்க்கலாம். நான் மூத்த குடிமகள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர். என் அடுக்ககத்தை 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். அதைக் கொண்டு இன்னொரு அடுக்ககம் வாங்க பணம் போதாது என்பதால், அடிமனையில் முதலீடு செய்யலாமா? சாந்தி, சென்னை. இன்றைக்கு ரியல் எஸ்டேட் சந்தை இருக்கும் நிலையில், வேண்டாம் என்று சொல்லத்தான் மனசு ஆசைப்படுகிறது. சென்னைக்கு ஒதுக்குப்புறமாக எங்கோ இருக்கும் பொட்டல்காட்டை எல்லாம் மனை பிரிவுகளாக போட்டு, கற்பனைக்கு எட்டாத விலை சொல்கின்றனர். இன்னும் 15 ஆண்டுகள் ஆனாலும், அந்தப் பக்கம் நல்ல தார்ச்சாலையோ, கழிவுநீர் வடிகால் வசதியோ, கார்ப்பரேஷன் குடிநீரோ, மெட்ரோ ரயிலோ வரவே போவதில்லை. மக்களின் மனை பேராசையை காசாக்குகின்றனர். உங்களுக்கு வந்த பணத்தை அஞ்சலகத்திலோ, வேறு வைப்பு நிதியிலோ போட்டு வையுங்கள்; உங்கள் மகன், மகளுக்கு வருங்காலத்தில் கணிசமான தொகையை சீதனமாக கொடுக்கலாம். எங்கள் பகுதியில், ஒரு நிறுவனம், 14.40 சதவீதம் வட்டி தருவதாக அடிக்கடி விளம்பரப்படுத்துகிறது. நான் 78 வயது மூத்த குடிமகன். ஒரு ஆண்டு குறுகிய காலத்திற்கு, 1 லட்சம் ரூபாயை நம்பி டிபாசிட் செய்யலாமா? எம்.மனோகரன், சென்னை. மக்களுடைய கவனத்தை கவர்வதற்காக இந்த வட்டி விகிதத்தை கொட்டை எழுத்தில் போட்டிருக்கின்றனர். அது மைனர் பெயரில், கார்டியன் 5 லட்சம் ரூபாயை, ஐந்து ஆண்டுகள் சேமித்தால் கொடுக்கப்படும் வட்டி விகிதம். மற்ற திட்டங்களிலும் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 14.40 சதவீத வட்டி என்றால், குறைந்தபட்சம் 24 சதவீத ரிட்டர்னையேனும் ஈட்டினால் தான், வாடிக்கையாளருக்கு இவ்வளவு தர முடியும். ஒழுங்கான நிதி நிறுவனத்தால், இவ்வளவு வட்டியை வாடிக்கையாளர்களிடம் இருந்து முறையாக வசூலிக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள். அது சாத்தியமில்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு, முதலுக்கு மோசம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை