ஐதராபாத் நகரின் முக்கியமான இடத்தில், மிகக் குறைந்த விலையில் வீட்டு மனைகளை வாங்கிய பிரபல நடிகர்கள், சந்திரபாபு நாயுடு, வெங்கையா நாயுடு ஆகியோரின் மருமகள்கள், அமைச்சர் கீதா ரெட்டி ஆகியோர் உட்பட 90 முக்கிய பிரமுகர்களிடம், சி.பி.ஐ., இன்று முதல் விசாரணை நடத்த உள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. கடப்பா தொகுதி எம்.பி.,யான இவர், முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட போது, இவரது சொத்து மதிப்பு 50 லட்ச ரூபாய் அளவில் இருந்தது. சமீபத்தில் இவர், கடப்பா தொகுதி தேர்தலில் போட்டியிட்ட போது, தன் வேட்பு மனுவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பின்னரும், இவருக்கு செல்வாக்கு கூடிக்கொண்டே வருவதால், இவரை ஒடுக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில லட்சங்களுக்கு சொந்தக்காரராக இருந்த ஜெகன் மோகன், தற்போது பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை குவித்தது குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என, ஆந்திர மாநில அமைச்சர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஜெகன் மோகனின் சொத்துக்கள் குறித்து விசாரிக்கும்படி, ஆந்திர ஐகோர்ட் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிமென்ட் கம்பெனி, கட்டுமான நிறுவனம், சாக்ஷி 'டிவி' உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவரது நிறுவனத்தில், பிரபல நிறுவனங்கள் பங்குதாரராக உள்ளன. ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்ததைப் பயன்படுத்தி, ஜெகன் மோகன் ரெட்டி, தனது நிறுவனத்தில் அதிக பங்குகளை வாங்கும் நிறுவனத்துக்கு சகாய விலையில் நிலங்களை ஒதுக்கீடு செய்ய உதவினார் என, குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், பிரமாண்ட நகரியம் ஒன்றை அமைக்க ஆந்திர அரசு ஒதுக்கிய நிலத்தை, தனியார் நிறுவனம் ஒன்று முக்கிய பிரபலங்களுக்கு குறைந்த விலையில் விற்றது, சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதில் நடந்த மெகா மோசடி மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:துபாயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் எம்மார் குரூப். இந்த நிறுவனம் ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில், சொகுசு பங்களாக்களுடன் நகரியம், மாநாட்டு மைதானம், நட்சத்திர ஓட்டல் மற்றும் கோல்ப் விளையாட்டு மைதானம் அமைக்கப் போவதாக அறிவித்தது. இதற்காக, ஆந்திர அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆந்திர மாநில தொழில் உள்கட்டமைப்பு கழகம், எம்மார் குரூப் நிறுவனத்திற்கு 530 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இதில், 285 ஏக்கர் நிலம், ஏக்கர் 29 லட்சம் ரூபாய் என்ற அளவில், எம்மார் குரூப்பிற்கு விற்கப்பட்டது. மீதமுள்ள நிலங்கள் எல்லாம், கோல்ப் மைதானத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில், 2 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்ற கட்டண அடிப்படையில், 66 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டன.பின்னர், ஆந்திர மாநில தொழில் உள்கட்டமைப்பு கழக அதிகாரிகள் மற்றும் எம்மார் குரூப் நிறுவனத்திற்கு இடையேயான ரகசிய உடன்பாடுகளால், குத்தகை நிலம் தொடர்பாக முதலில் போடப்பட்ட ஒப்பந்தங்களில், பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம், 95 சதவீத வருவாய் எம்மார் குரூப் நிறுவனத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன், இந்த ஒட்டு மொத்த மேம்பாட்டு திட்டத்தையும் எம்மார் குரூப் நிறுவனம், தன் துணை நிறுவனமான எம்மார் - எம்.ஜி.எம்., நிறுவனத்திற்கு மாற்றியது. ஆந்திர தொழில் கட்டமைப்பு கழகம் ஒப்புதல் இல்லாமல் இதைச் செய்தது.
மேலும், அரசிடம் இருந்து நகரியம் அமைக்கப் பெற்ற நிலத்தை, எம்மார் குரூப், ஒரு சதுர கெஜம் 5 ஆயிரம் ரூபாய் என்ற விலையில், வீட்டு மனைகளாக்கி விற்றுள்ளது. அதேநேரத்தில், இந்த வீட்டு மனைகளுக்கு ஒரு சதுர கெஜத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் என்ற அளவில், பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.இப்படி விற்கப்பட்ட நிலத்தை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மருமகள், பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடுவின் மருமகள், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீனிவாஸ், நடிகர் மகேஷ் பாபு, சிரஞ்சீவி மகன் ராம்சரண், மாநில அமைச்சர் கீதா ரெட்டி, மாநில சுரங்கத் துறை அமைச்சர் அருணா குமாரியின் மருமகள் உள்ளிட்ட பலர் வாங்கி, வீடு கட்டியுள்ளனர். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர்களும் இந்த நிலத்தில் வீடு கட்டியுள்ளனர். நகரியத்திற்காக ஒதுக்கிய நிலத்தை, வீட்டு மனைகளாக்கி, அடிமாட்டு விலைக்கு விற்றதால், ஆயிரம் கோடி ரூபாய் வரை மாநில அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதனால், இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
எம்மார் குரூப் ஒதுக்கிய நிலத்தை வாங்கி, வீடு கட்டியுள்ள கிட்டத்தட்ட 90 வி.ஐ.பி.,க்களிடம் இன்று முதல் சி.பி.ஐ., விசாரணை நடத்த உள்ளது. தினமும் எட்டு பேரிடம் விசாரணை நடக்க உள்ளது. அப்போது அவர்களிடம், என்ன விலைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது, எந்த நிதியைக் கொண்டு, நிலத்தை அவர்கள் வாங்கினர். வங்கி ஆவணங்கள் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் போன்றவை பற்றியும் விசாரிக்கப்பட உள்ளன.இவ்வாறு சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.
-நமது சிறப்பு நிருபர்-