உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய மதுபான கொள்கையை தடுப்பு ரூ. 8,900 கோடி வருவாய் இழப்பு

புதிய மதுபான கொள்கையை தடுப்பு ரூ. 8,900 கோடி வருவாய் இழப்பு

விக்ரம் நகர்:செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி கூறியதாவது:சி.ஏ.ஜ., அறிக்கையில் உள்ள எட்டு அத்தியாயங்களில் ஏழு அத்தியாயங்கள் பழைய கலால் கொள்கையின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. ஒன்று மட்டுமே புதிய கொள்கையை பற்றி கூறுகிறது.முந்தைய ஆம் ஆத்மி அரசு, எப்போதும் பழைய கலால் கொள்கையால் ஊழல் நடப்பது குறித்து குறை கூறி வந்தது. அது சட்டவிரோத மதுபானக் கடத்தலை எளிதாக்கியது. மதுபானக் கடை உரிமையாளர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், விலைகளை உயர்த்தியதாகவும், டில்லியின் கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை காட்டுகிறது.ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய கலால் கொள்கை மிகவும் வெளிப்படையானது. டில்லியின் வருவாய் வசூலை கணிசமாக அதிகரித்திருக்கலாம் என்றும் சி.ஏ.ஜ., அறிக்கை காட்டுகிறது.அதே கொள்கையை செயல்படுத்திய பிறகு பஞ்சாபில் கலால் வருவாய் 65 சதவீதம் அதிகரித்தது.இருப்பினும், துணைநிலை கவர்னர், சி.பி.ஐ., அமலாக்கத் துறையின் தலையீடு காரணமாக இந்தக் கொள்கை முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் டில்லிக்கு ஆண்டுக்கு 8,900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்தக் கொள்கையைத் தடுப்பதில் இவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.24.23 கோடி இழப்பு

கடந்த 2010 பிப்ரவரியில், கடத்தலைத் தடுக்கவும், கண்டறியும் தன்மையை உறுதி செய்யவும் நகரில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் பார்கோடிங் அறிமுகப்படுத்தப்படுமென, டில்லி அமைச்சரவை முடிவு செய்தது.இந்த முடிவின்படி, செயல்படுத்தும் நிறுவனத்திற்கு 24.23 கோடி ரூபாய் தேவையற்ற லாபம் கிடைத்தது என, சி.ஏ.ஜி.,யின் 'மதுபான ஒழுங்குமுறை மற்றும் விநியோகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை'யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இ.எஸ்.சி.ஐ.எம்.எஸ்., எனும் கலால் விநியோகச் சங்கிலி தகவல் மேலாண்மை அமைப்பின் நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, 2013 டிசம்பர் முதல் 2022 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் நிறுவனம் இந்த லாபத்தை ஈட்டியுள்ளது.விற்கும் இடத்தில் பார்கோடு ஸ்கேனிங் மூலம் அங்கீகரிக்கப்படாத மதுபான பாட்டில்களுக்கு பணம் செலுத்தப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.

தர விதிகள் மீறல்

பல மதுபான மொத்த விற்பனையாளர்கள், இந்திய தரநிலைகள் பணியகத்தின் விதிகளுக்கு இணங்கவில்லை என்பதையும் சி.ஏ.ஜி.,யின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.பல்வேறு பிராண்டு மது வகைகளின் தரம், தீங்கு விளைவிக்கும் பொருட்கள், கன உலோகங்கள், மெத்தில் ஆல்கஹால், நுண்ணுயிரியல் பற்றிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.வெளிநாட்டு மதுபான சோதனை வழக்குகளில் 51 சதவீத அறிக்கைகள் ஓராண்டுக்கு மேல் பழமையானவை, காணாமல் போனவை அல்லது தேதி இல்லாதவை என்பதையும் சி.ஏ.ஜி., சுட்டிக்காட்டி உள்ளது.பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதும், பல்வேறு நிறுவனங்களுக்கு கலால் துறை உரிமங்களை வழங்கியதாக சி.ஏ.ஜி., குற்றஞ்சாட்டியுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் ஏகபோகம்

சில வகை மது விற்பனையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக சலுகை காட்டப்பட்டதாக சி.ஏ.ஜி., அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.டில்லியில் 13 உரிமைபெற்ற மது தயாரிப்பாளர்களால் 367 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐ.எம்.எப்.எல்., மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் 71 சதவீத விநியோகத்தை மூன்று தனியார் மொத்த விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டதாக அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மேலும், 32 மண்டலங்களில் பரவியுள்ள 849 மதுபான விற்பனைகளை நடத்துவதற்கு 22 தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டதாக சி.ஏ.ஜி., அறிக்கை விரிவாக பட்டியலிட்டுள்ளது.

மதுபான கொள்கை வழக்கு பின்னணி

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முந்தைய ஆம் ஆத்மி அரசு, டில்லியில் 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை வகுத்தது.இதனால், பல தனியார் மதுபான அதிபர்கள் பலன் அடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.விசாரணை நடத்திய சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தது.அதைத் தொடர்ந்து புதிய மதுபானக் கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.தங்களுக்கு சாதகமாக கொள்கை வகுக்க பி.ஆர்.எஸ்., தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தொழிலதிபர் சரத் சந்திர ரெட்டி மற்றும் பலர் அடங்கிய, சவுத் குரூப், ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.இந்த பணத்தில் 45 கோடி ரூபாயை, கோவா சட்டசபைத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பலரும் இப்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமினில் வெளியே உள்ளனர்.

லாப வரம்பு உயர்வு

மொத்த விற்பனையாளர்களின் லாப வரம்பு முந்தைய 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கொள்கையை உருவாக்கிய நிபுணர் குழுவின் பரிந்துரைகள், அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழுவால் மாற்றப் பட்டன. நிபுணர் குழு மதுபான மொத்த விற்பனையை ஒரு அரசு நிறுவனம் கையாள வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் மொத்த விற்பனையை தனியார் நிறுவனங்கள் கையாள வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை