| ADDED : ஏப் 03, 2024 12:35 AM
ராய்ப்பூர், சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தார் லோக்சபா தொகுதி அமைந்துள்ளது. இங்கு வரும் 19ல் தேர்தல் நடக்கிறது. இதை சீர்குலைக்கும் வகையில் நக்சல்கள் சதி செயலில் ஈடுபடுவதற்காக பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், சிறப்பு அதிரடிப்படை போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இருந்து நக்சல்கள் சடலங்கள் மீட்கப்பட்டன. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டன. முன்னதாக மார்ச் 27ல் இதே மாவட்டத்தின் பசகுடா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் 41 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.