புதுடில்லி:ஷகர்பூரில், 3 வயது சிறுமி மற்றும் 11 வயது சிறுவன் ஆகிய இருவரும் கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் கிழக்கு மாவட்ட துணைக் கமிஷனர் அபூர்வ குப்தா கூறியதாவது: நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு ஒரு தம்பதி தங்கள் மூன்று வயது மகன், 11 வயது மகளுடன் காரில் ஷகர்பூர் விகாஸ் மார்க்கில் உள்ள 'ஹிரா ஸ்வீட்ஸ்' கடைக்கு வந்தனர். நடவடிக்கை
கடைக்கு முன் நின்றிருந்த ஒருவர் பார்க்கிங் ஊழியர் எனக்கூறி காருக்குள் ஏறினார். தாயும் தந்தையும் இனிப்புகள் வாங்க கடையை நோக்கிச் சென்றனர் சென்றனர். ஆனால், குழந்தைகள் இறங்குவதற்குள் காரை எடுத்த அந்த நபர், பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தாமல் வேகமாக காரை ஓட்டிச் சென்றார். காருக்குள் இருந்த இரு குழந்தைகளும் அலறினர். குழந்தைகளின் தந்தை உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.மாநகரப் போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். மேலும், காரை ஓட்டியவாறே குழந்தைகளின் தந்தைக்கு மொபைல் போனில் பேசிய அந்த நபர் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். இதற்கிடையில், ஷகர்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவும், லக்ஷ்மி நகர் தலைமையிலான மற்றொரு குழுவும் அந்தக் காரை விரட்டிச் சென்றனர். தொழில்நுட்பக் குழுவினரும் முடுக்கி விடப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று போலீசார் கடத்தல்காரனை தேடினர். மூன்று மணி நேரத்துக்கு காரை விடாமல் ஓட்டிய கடத்தல்காரன், போலீஸ் படை இடைவிடாமல் துரத்துவதை அறிந்து, சமய்பூர் பட்லி பகுதியில் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டான். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் படையினர் அந்தக் கார் நிற்கும் இடத்துக்கு சென்று விட்டனர். விசாரணை
காரில் இரு குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர். இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல, காரில் வைத்திருந்த நகை, மொபைல் போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களும் அப்படியே இருந்தன.இந்த தேடுதல் வேட்டைக்கு டில்லி மாநகரப் போலீசுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் துரிதமாக செயல்பட்டனர். கடத்தல்காரனை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.