| ADDED : மே 10, 2024 11:11 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் இரண்டு வாலிபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர், காயம் அடைந்த மற்றொரு வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் தெற்கு மண்டல துணைக் கமிஷனர் அங்கித் சவுகான் கூறியதாவது:சங்கம் விஹார் சி -பிளாக்கில் நேற்று, பிரோஸ், 17, ஆசிப், 17 மற்றும் சல்மான்,17 ஆகிய மூவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 7 பேர், மூவரையும் சரமாரியாகக் தாக்கினர்.ரத்தவெள்ளத்தில் மூவரும் சரிந்தவுடன் ஏழு பேரும் தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், மூவரையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.ஆனால், செல்லும் வழியிலேயே பிரோஸ் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆசிப் மருத்துவமனையில் இறந்தார். சல்மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.பிரோஸ் குழுவினருக்கும் கொலைக் கும்பலுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வுக்கு செய்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதில், பரித் என்ற அமன், 19 மற்றும் அபிஷேக் என்ற பாபு ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற ஐந்து பேரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.