| ADDED : மார் 28, 2024 10:40 PM
சித்ரதுர்கா : ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பணம், தங்க நகைகள், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை, தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.சித்ரதுர்கா, ஹிரியூரின் வீடு ஒன்றில் பெருமளவில் தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், அங்கு சென்று சோதனை நடத்தினர். தங்க மோதிரம், கம்மல்கள், செயின்கள் உட்பட, 5 கிலோ 250 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.நகைகளுக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால், அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நகைகள் யாருடையது, எதற்காக பதுக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து ஹிரியூரு போலீசார் விசாரிக்கின்றனர். நகைகளை வைத்திருந்த மனோஜ் என்பவரிடம் விசாரணை நடக்கிறது.முதற்கட்ட விசாரணையில், இந்த நகைகள் தாவணகெரேவின், வர்த்தமானா நகைக்கடைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.