6 நக்சல்கள் சுட்டுக்கொலை தெலுங்கானா போலீஸ் அதிரடி
ஹைதராபாத்,தெலுங்கானாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பெண்கள் உட்பட ஆறு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானாவில், அண்டை மாநிலமான சத்தீஸ்கரில் இருந்த நக்சலைட்டுகள் பலர் ஊடுருவ உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில எல்லைகளில் தெலுங்கானா நக்சல் தடுப்பு போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நுழைந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காரகாகுடேம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை ஒட்டிய மோதி கிராமத்தில் அதிரடியாக புகுந்த போலீசார், நேற்று காலை 6:45 மணிக்கு அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை சுற்றி வளைத்தனர். அவர்களை சரணடைய சொல்லி வலியுறுத்தினர். அதை ஏற்காத நக்சல்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் அவர்களை நோக்கி சுட்டனர்.இரு தரப்பினர் இடையேயான சண்டை நீண்ட நேரம் நீடித்தது. இதில், ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் பெண்கள். இந்த மோதலில் போலீசார் தரப்பில் இரண்டு கமாண்டோக்கள் காயமடைந்தனர். இறந்தவர்கள் பற்றிய விபரம் தெரியாத நிலையில், உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.