கடித்து குதறிய நாய்கள் 4 வயது சிறுவன் காயம்
ஹொஸ்கோட் : ஹொஸ்கோட்டில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த, 4 வயது குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.பெங்களூரு, ஹொஸ்கேட்டின் சூலிபெலே கிராமத்தைச் சேர்ந்தவர் சிம்ரன். இவரின் 4 வயது மகன் ஆவாஜ். நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன், கடைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.அப்போது மூன்று, நான்கு தெரு நாய்கள், ஆவாஜை கடித்துக் குதறின. அவனது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர், நாய்களை விரட்டி, அவனை மீட்டனர். நாய்கள் கடித்ததில், ஆவாஜ் வலது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பெங்களூரு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சூலிபெலே கிராம பங்சாயத்து உறுப்பினர் சபீர் பெய்க் கூறுகையில், ''சமீப காலமாக கிராமத்தில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் நடந்த சாலையில், நான்கு பள்ளிகள் உள்ளன. தினமும் குழந்தைகள், இவ்வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.