உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிகள் துவங்கி ஒரு மாசமாச்சு இன்னும் வராத பாட புத்தகங்கள்

பள்ளிகள் துவங்கி ஒரு மாசமாச்சு இன்னும் வராத பாட புத்தகங்கள்

பெங்களூரு: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2024 - 25ம் கல்வி ஆண்டின் வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் கடந்தும் மாணவர்களுக்கு முழுமையான அளவில், பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை.

ஆங்கில வழி

'அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், வகுப்புகள் துவங்கும் முன்பே பாடப் புத்தகங்கள் கிடைக்கும்' என, கல்வித்துறை உறுதி அளித்திருந்தது. ஆனால் 2024 - 25ம் கல்வி ஆண்டின் வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் கடந்தும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. கன்னடம், சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இன்னும் வரவில்லை. கர்நாடக அரசு 2,300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவக்கி உள்ளது. ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் வழங்காமல், அரசு தாமதிக்கிறது.ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியின் எந்த பாடப் புத்தகங்களும், இன்னும் வரவில்லை. ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையில் சில புத்தகங்கள் வந்துள்ளன.மேலும், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடம், சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் வரவில்லை. பெங்களூரு, ஹெப்பாலின் கெம்பாபுராவில் உள்ள கர்நாடக பப்ளிக் பள்ளி, பேட்ராயனபுரா அரசு பள்ளி, ஹொசகெரேஹள்ளியின், அரசு பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் வரவில்லை என, ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.பெங்களூரில் மட்டுமின்றி துமகூரு, மைசூரு, தாவணகெரே, ராய்ச்சூர் உட்பட, பல்வேறு மாவட்டங்களிலும் கூட இதே பிரச்னை உள்ளது. பாடப் புத்தகங்கள் இல்லாமல், படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து, கர்நாடக பாடப் புத்தக சங்க நிர்வாகத்திடம், ஊடகத்தினர் கேள்வி எழுப்பினால், 'தேவைக்கு தகுந்தபடி, 99 சதவீதம் பாடப் புத்தகங்களை அந்தந்த பகுதிகளின் கல்வி அதிகாரிகளின் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளோம்' என்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், பாடப் புத்தகங்களை தாமதிக்காமல் பள்ளிகளுக்கு அனுப்பியதாக கூறுகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள் வரவில்லை' என, குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளிகள் புகார்

இது குறித்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் கூறுகையில், ''பெரும்பாலான பள்ளிகள், பாடப் புத்தகங்கள் வரவில்லை என, புகார் அளித்துள்ளன. 95 முதல் 99 சதவீதம் வரை பாடப் புத்தகங்களை சப்ளை செய்ததாக, புத்தகங்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். ''சில இடங்களில் பகுதி - 2 பாடப் புத்தகங்கள் வரவில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அட்மிஷன் பெற்ற மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகங்களும் வரவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ