உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயத்தில் அசத்தும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 

விவசாயத்தில் அசத்தும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் 

மண்ணை நம்பி பணம் முதலீடு செய்தால் லாபம் ஈட்டலாம் என்று சொல்வர். இதனால் சமீப காலமாக பெரிய நிறுவனங்களில் வேலைகளில் இருப்போர், வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குச் சென்று, விவசாயம் செய்து சாதித்து வருகின்றனர்.இதுபோல ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், விவசாயத்தில் சாதித்து வருகிறார்.உத்தர கன்னடாவின் ஜோய்டா அருகே சித்த காளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னாகர் கிருஷ்ண கவுடா. கடந்த 1993ல், ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பணியை துவங்கியவர், பல மாநிலங்களில் பணியாற்றினார். கடந்த 2016ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசு வேலை

சொந்த ஊருக்கு வந்ததும் கிராம கணக்கர், வங்கி தேர்வுகளுக்கு தயாரானார். தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேறு வேலைக்கு எதுவும் செல்லவில்லை.இதற்கிடையில் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வாழை, பாக்கு மரங்கள், மிளகு செடிகளை பயிரிட்டு வளர்க்க ஆரம்பித்தார். அதன் பின்னர் நிலக்கடலையும் சாகுபடி செய்தார். இதில் லாபம் கிடைக்க துவங்கியதால், அரசு பணிக்கு தேர்வு எழுதுவதை கைவிட்டு, முழுநேர விவசாயியாக மாறினார்.நிலத்தில் காய்கறிகளையும் பயிரிட ஆரம்பித்தார். இது தவிர தேன் வளர்ப்பிலும் ஆர்வம் காட்டினார்.

மாதம் ரூ.1.50 லட்சம்

விவசாய நிலத்தில் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், வாழை, பாக்கு மரங்கள், மிளகு செடிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகிறார். விவசாயத்தின் மூலம் தற்போது மாதம் 1.50 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.இதுகுறித்து ரத்னாகர் கிருஷ்ண கவுடா கூறுகையில், ''விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர் விவசாய தொழில் உள்ள மகிழ்ச்சி வேறு எந்த தொழிலும் இல்லை என்பதை உணர்ந்தேன். என் உயிர் மூச்சு இருக்கும் வரை, விவசாயத்தில் ஈடுபடுவேன். வேலை இல்லை என்று இன்றைய இளைஞர்கள் கவலைப்பட வேண்டாம். விவசாயத்தில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிப்பதுடன், சொந்த தொழிலும் செய்யலாம். எனது நிலத்தில் வேலைகளை நானே செய்து கொள்கிறேன். தேவைப்படும்போது மட்டும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துக் கொள்கிறேன்,'' என்றார்.-- நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ