பெங்களூரு: பெங்களூரில், 'லிப்ட்' கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவரை கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.கர்நாடக மாநிலம் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா நேற்று அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோரமங்களாவில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தார்.நேற்று அதிகாலை 1:30 மணியளவில் வீட்டுக்கு திரும்பும் போது, அவரது நண்பரிடம், தான் காரை ஓட்டுவதாக கூறினார். அவருக்கு சரியாக கார் ஓட்டத் தெரியாததால், சாலை ஓரத்தில் நின்றிருந்த மூன்று ஆட்டோக்கள் மீது மோதினார். ஆட்டோ ஓட்டுனர்கள் திட்டுவர் என்ற அச்சத்தில், போலீசின் 112 உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்தார்.போலீசார் தன்னை கைது செய்து விடுவர் என அஞ்சியதால், காரில் இருந்து இறங்கிய அப்பெண், சாலையின் மறுபக்கம் சென்று, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டியிடம், 'லிப்ட்' கேட்டு ஏறினார். உஷாராக, இளம்பெண்களுக்கான பாதுகாப்பு செயலியை ஆன் செய்து, தன் நண்பர்கள், தந்தைக்கு தகவல் அனுப்பினார். 'லிப்ட்' தந்தவர், ஆள் நடமாட்டம் இல்லாத ஹெப்பகோடி பகுதிக்கு அப்பெண்ணை அழைத்து சென்று, அங்கிருந்த ஷெட் ஒன்றில் தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.அப்பெண் எதிர்க்கவே, அவரை தாக்கி, ஆடைகளை கிழித்துள்ளார். இளம்பெண்ணின் மொபைல் போனை 'டிராக்' செய்த போலீசார், ஷெட் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அதற்குள் இருசக்கர வாகன ஓட்டி, அங்கிருந்து பைக்குடன் தப்பியோடி விட்டார்.ஆடைகள் கிழிந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை, மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளாரா என்பது மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும். பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.