உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவுக்கு... ஜாமின்! 17 மாதங்களுக்கு பின் விடுதலை

ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவுக்கு... ஜாமின்! 17 மாதங்களுக்கு பின் விடுதலை

புதுடில்லி, மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 17 மாத சிறைவாசத்துக்குப் பின், அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, 2021 - 2022ம் நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கலால் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இது, மதுபான விற்பனை நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.மேல் முறையீடுஇதையடுத்து, இந்தக் கொள்கையை நிறுத்தி வைத்து, டில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். மேலும், மோசடி தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டார்.இந்த வழக்கு தொடர்பாக கலால் துறையை கவனித்து வந்த, முன்னனாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவிடம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பலமுறை விசாரித்தன.இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு, பிப்., 26ல், சி.பி.ஐ.,யால் அவர் கைது செய்யப்பட்டார். பிப்., 28ல் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத் துறையும், இதில் நடந்துள்ள பணமோசடி வழக்கில் அவரைக் கைது செய்தது.இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தற்போது சிறையில் உள்ளனர்.இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை, விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.டில்லி உயர் நீதிமன்றத்தின், மே 21 உத்தரவை எதிர்த்து, மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்காக இருக்க வேண்டும் என்ற கொள்கையை, விசாரணை மற்றும் உயர் நீதிமன்றங்கள் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.இதனால்தான், ஜாமின் கேட்டு பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மதுபான ஊழல் வழக்கில், நீதிமன்ற விசாரணை துவங்காத நிலையில், 17 மாதங்களாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமையை மீறும் செயல். தேவைப்படாத நிலையில், விசாரணையே துவங்காத நிலையில், ஒருவரை குற்றவாளியாக்கி, சிறையில் அடைப்பது தவறு.இதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இவர் சமூகத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்துள்ளார். தப்பி ஓடிவிட மாட்டார். அதனால் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.உத்தரவுஅவர், 10 லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு இரண்டு தனிநபர் ஜாமினில் விடுவிக்கப்படலாம். தன் பாஸ்போர்ட்டை அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.விசாரணை அதிகாரிகள் முன், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை 10:00 - 11:00 மணிக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, சாட்சியங்களை கலைப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா, திஹார் சிறையில் இருந்து, 17 மாத சிறைவாசத்துக்குப் பின் நேற்று விடுவிடுக்கப்பட்டார்.

பா.ஜ., எச்சரிக்கை

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது சத்தியத்துக்கு கிடைத்த வெற்றி. அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்களான ராகவ் சத்தா, சஞ்சய் சிங், டில்லி அமைச்சர் ஆதிஷி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.இதற்கு எதிராக, பா.ஜ.,வின் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவை, எம்.பி., யோகேந்திர சந்தோலியா ஆகியோர், 'ஜாமின் தான் கிடைத்துள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அதனால், ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்' என, கூறியுள்ளனர்.

கண்ணீர்விட்ட அமைச்சர்

டில்லி அமைச்சர் ஆதிஷி, நேற்று பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர், டில்லி மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க உழைத்ததால், மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது உண்மை வென்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விரைவில் விடுதலை செய்யப்படுவார், என, பேசினார்.அப்போது உணர்ச்சிப் பெருக்கில், அவர் கண்ணீர் விட்டு, தேம்பித் தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

அமைச்சரவையில் இடமுண்டா?

-நமது சிறப்பு நிருபர்-மதுபான வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன், டில்லி அரசின் துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருந்தார். கலால், கல்வி, நிதி உள்பட பல துறைகளை அவர் கவனித்து வந்தார். தற்போது ஜாமினில் வந்துள்ளதால், மணீஷ் சிசோடியா மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.இதே வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளார். அமைச்சரவையில் ஒருவரை இணைக்க வேண்டுமானால், முதல்வரின் செயலகம், டில்லி துணை நிலை கவர்னருக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும். தற்போது முதல்வர் சிறையில் உள்ளதால், அதுபோன்ற பரிந்துரையை அனுப்ப முடியாது என்பதால், மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் அமைச்சரவையில் தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.டில்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதனால், அரசியல் ரீதியில் கட்சியை வலுப்படுத்துவது, பிரசாரத்தில் ஈடுபடுவது போன்றவற்றில் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிறிது காலத்துக்கு அவர் குடும்பத்துடன் செலவிடுவார் என்று, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohanakrishnan
ஆக 12, 2024 23:50

If this idiot eating food and not shit file a case against the authorities stating that his jail term ilkegal


Iniyan
ஆக 12, 2024 21:36

இந்த கிரிமினலை வெளியே விட்ட நீதி மன்றம் ..நாட்டை கெடுபதே நீதி மன்றங்கள் தான்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை