சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி., சரண்
சுல்தான்பூர்:ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங், உத்தர பிரதேச நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் 2001ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், வன்முறையை தூண்டியதாகவும் சஞ்சய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி சிறப்பு நீதிமன்றம், சஞ்சய் சிங்குக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த தண்டனையை எதிர்த்து, கடந்த 6ம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அதேநேரத்தில், கடந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி சஞ்சய் சிங் தரப்பில் தாக்கல்செய்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்ற லக்னோ கிளை, சஞ்சய் சிங்கின் ஜாமின் மனு ஆக. 29ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருப்பதால், அதுவரை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் சரண் அடைய தேவையில்லை என உத்தரவிட்டு இருந்தது.ஆனால், கடந்த 13ம் தேதி சிங், சமாஜ்வாதி கட்சி தலைவர் அனூப் சந்தா மற்றும் நான்கு பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது.இந்நிலையில், சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் நேற்று சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி 50,000 ரொக்கப் பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். ஜாமின் தொகை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தார்.