| ADDED : ஆக 21, 2024 09:07 PM
புதுடில்லி:மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்து பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி வழங்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சி மகளிர் அணியினர், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மகளிர் அணி தலைவி சரிகா சவுத்ரி, எம்.எல்.ஏ.,க்கள் பிரீத்தி தோமர், தன்வதி சண்டேலா ஆகியோர் தலைமையில் கூடிய அக்கட்சியின் பெண்கள், கோல்கட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது, சரிகா சவுத்ரி பேசியதாவது:கோல்கட்டாவில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு இங்கு கூடியுள்ளோம். கொடூரத்தைச் செய்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். கோல்கட்டாவில் மட்டுமல்ல நாடு முழுதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீடிக்கிறது. இதேநிலை நீடித்தால் நம் நாட்டில் இருந்து பெண்கள் வெளியேறிக் கொண்டேர் இருப்பர்.மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மிகவும் அதிகமாக நடக்கின்றன. சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது மிகவும் வேதனைக்குரியது.மத்திய அரசு இந்த விஷயத்தில் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ., பிரீத்தி தோமர், “டாக்டர்களின் பாதுகாப்புக்காக கடும் தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நிர்பயா சம்பவத்துக்கு 12 ஆண்டுகளுக்குப் பின் அதேபோன்ற ஒரு கொடூரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறை ஒரு டாக்டர் மருத்துவமனைக்குள்ளேயே கொடூரமாக பலியாகி இருக்கிறார். இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்,”என்றார்.