உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி, மகனை பார்த்து நடிகர் தர்ஷன் கண்ணீர்

மனைவி, மகனை பார்த்து நடிகர் தர்ஷன் கண்ணீர்

பெங்களூரு : தன் ரசிகர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், மனைவி, மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை, 33, கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தர்ஷனை பார்ப்பதற்காக, அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் வினிஷ் ஆகியோர் நேற்று, சிறைக்குச் சென்றனர். தான் கொண்டு வந்திருந்த மதிய உணவை கணவருக்கு விஜயலட்சுமி வழங்கினார்.

எதிர்கொள்வோம்

மனைவி, மகனை பார்த்ததும் தர்ஷன் கண் கலங்கினார். மகனை ஆரத்தழுவிக் கொண்டாராம். மனைவியிடம் கண்ணீர் விட்டு அழுதாராம். சிறிது நேரம் மனம் விட்டுப் பேசி உள்ளனர். அப்போது, 'சட்டப்படி எதிர்கொள்வோம்' என, மனைவி தைரியம் ஊட்டி உள்ளார்.தோழிக்காக, ரசிகரை கொலை செய்த வழக்கில் சிக்கியும், தற்போது தன்னை பார்த்து தைரியம் ஊட்டிய மனைவியின் செயலையும் நினைத்து, அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இவர்கள் சென்ற சிற்று நேரத்தில், அவரது நண்பரும், நடிகருமான வினோத் பிரபாகர்; திருநங்கை நட்சத்திரா ஆகியோர் தர்ஷனை சந்தித்து பேசினர்.

சொகுசு வசதிகள்

இதற்கிடையில், அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குற்றப்பின்னணியில் இருக்கும் பலருடன் தர்ஷன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கென தனிக்குழுக்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

பவித்ராவுக்கு ரூ.2 கோடி

தர்ஷன் தோழி பவித்ரா கவுடா வீடு வாங்குவதற்கு, சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் சவுந்தர்யா ஜெகதீஷ், 2 கோடி ரூபாய் வழங்கிய தகவல் நேற்று வெளியானது. இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில், '60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து, அவரது மனைவி, சுரேஷ் என்பவர் மீது மஹாலட்சுமி லே - அவுட் போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பவித்ரா வீடு வாங்குவதற்கு பணம் வழங்கியது தெரிய வந்துள்ளது.

4 பேர் துமகூரு சிறைக்கு மாற்றம்

ரேணுகாசாமியை கொலை செய்துவிட்டு, காமாட்சி பாளையா போலீசில் சரண் அடைந்த ரவிசங்கர், கார்த்திக், கேசவமூர்த்தி, நிகில் ஆகிய நான்கு பேரை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, வேறு நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கோரி, பெங்களூரு 24ம் ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் அரசு தரப்பில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.கொலை பின்னணியில், தர்ஷன் இருப்பதாக பகிரங்கப்படுத்தியது இவர்கள். எனவே இவர்களின் பாதுகாப்பு கருதி, இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு வக்கீல் பிரசன்ன குமார் வாதாடினார். இதை ஏற்று, அவர்கள் நால்வரையும், துமகூரு மாவட்ட சிறைக்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ