மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
கல்பேட்டா: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் ஏழாவது நாளாக தேடுதல் பணி நேற்று தொடர்ந்தது.முண்டக்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அங்கு வசித்தோர் எண்ணிக்கையை பட்டியலிட்டு, அதில் காணாமல் போனவர்களை துல்லியமாக அடையாளம் கண்டு தேட கமிட்டி அமைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில், 221 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேப்பாடி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமப்பகுதிகளில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆறு கர்ப்பிணிகள், 599 குழந்தைகள் உட்பட 2,514 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு அறிக்கையின்படி 221 உடல்களும், 166 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன சிலரை தொடர்பு கொள்ள முடிந்ததை அடுத்து, மாயமானோர் எண்ணிக்கை 206ல் இருந்து 180 ஆக குறைந்துள்ளது.சூரல்மலை பகுதியில் ஏழாவது நாளாக நேற்று தேடுதல் பணி தொடர்ந்தது. முண்டக்கை பகுதியில் தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இது குறித்து, ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் கூறியதாவது: தேடுதல் பணிக்கு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில், மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளாட்சி அமைப்பினர், உள்ளூர்வாசிகள், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இடம்பெறுவர். முண்டக்கையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அங்கு வசித்தோர் எண்ணிக்கையை இந்த கமிட்டி பட்டியலிடும். அந்த பட்டியலில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கும்.ஒரு பகுதியில் தேடுதல் பணி முழுமையாக முடிந்த பின், அடுத்த இடத்துக்கு அந்த குழு நகரும். ராணுவம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி இந்த கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, சூரல்மலை பகுதியில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தேடுதல் பணி தொடர்கிறது. மண்ணில் புதையுண்ட பொருட்களை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் பணி நடக்கிறது. மேலும், தமிழக தீயணைப்பு படையைச் சேர்ந்த 49 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் பாகங்கள், ஹாரிசன்ஸ் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.பிரதமரை சந்திப்பேன்
நிலச்சரிவு முதலில் ஏற்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தேன். அரசியல் பேசுவதற்கு இது நேரமல்ல. பாதிப்புகள் குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தர வேண்டும். அதை, மாநில அரசு உறுதி செய்த பின், அந்த தரவுகளுடன் பிரதமரை சந்திப்பேன். - சுரேஷ் கோபிமத்திய இணையமைச்சர், பா.ஜ.,
மேற்கு தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ., பகுதி, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு சாத்தியமுள்ள பகுதியாக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், கர்நாடகாவில் 20,668, தமிழகத்தில் 6,914, கேரளாவில் 9,993 சதுர கி.மீ., பகுதிகள் இடம் பெற்றுள்ளன.மாநில அரசுகளின் எதிர்ப்பால் வரைவு அறிக்கைகள் மீதான இறுதி அறிக்கை வெளியிட தாமதமாகிறது. வனப்பகுதிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அவர்களின் கருத்துகளை 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளோம். கேரள வனப்பகுதிகளில் சட்டவிரோத மனித ஆக்கிரமிப்புகள் மற்றும் சுரங்கப் பணிகள் நடப்பதால் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. பூபேந்தர் யாதவ்,மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், பா.ஜ.,
கேரளாவின் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் மதியமே ராணுவம் மீட்புப் பணியில் இறங்கியது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கேரள - கர்நாடக ராணுவ முகாமில் இருந்து மேஜர் ஜெனரல் மாத்யூ, ஜூலை 31ல் வயநாடு வந்தார்.அன்று முதல், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வந்தார். அவரது தலைமையில் 500 ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். முதல் நாளே 300 பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேஜர் ஜெனரல் மேத்யூ, வயநாட்டில் இருந்து நேற்று பெங்களூரு திரும்பினார். அவருக்கு, கலெக்டர் மேகாஸ்ரீ நன்றி தெரிவித்தார். ''என் வாழ்நாளில், 1999 ஒடிசா புயலுக்கு பின், மிகப் பெரிய மீட்புப்பணியாக இதை கருதுகிறேன்,'' என மேத்யூ தெரிவித்தார்.
1 hour(s) ago