சித்ரதுர்கா : விதான் சவுதா முன்பு, வாலிபர் ஸ்கூட்டரை எரித்த வழக்கில், வாலிபரின் தாய் அளித்த புகாரை ஏற்க மறுத்த, ஏ.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.சித்ரதுர்கா, செல்லகெரேயை சேர்ந்தவர் ரத்னம்மா. இவரது மகன் பிரித்விராஜ், 24. டிப்ளமோ மாணவர். கடந்த மாதம் நண்பர்களுடன் மலையேற்றம் சென்றவர் திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி, செல்லகெரே போலீஸ் நிலையத்தில், தாய் புகார் கொடுக்க சென்றார். ஆனால், புகாரை போலீசார் வாங்கவில்லை.வீடு திரும்பிய பிரித்விராஜ், தாயிடம் புகார் வாங்காதது குறித்து, செல்லகெரே போலீஸ் நிலையம் சென்று கேட்டு உள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.நியாயம் கேட்க சென்ற தன்னை, போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டிய பிரித்விராஜ், நியாயம் கிடைக்கவில்லை என்றால், விதான் சவுதா, ராஜ்பவனை குண்டு வைத்து தகர்ப்பேன் என்றும், வீடியோவில் பேசி மிரட்டினார். அவர் கைது செய்யப்பட்டார். மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், கடந்த 14ம் தேதி, விதான் சவுதா முன் தனது ஸ்கூட்டரை பிரித்விராஜ் எரித்தார். செல்லகெரே போலீசார் மீதும் குற்றச்சாட்டு கூறினார். இதையடுத்து கடந்த மாதம், ரத்னம்மா புகார் கொடுக்க வந்த போது, என்ன நடந்தது என்று விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, டி.எஸ்.பி., ராஜண்ணாவுக்கு, சித்ரதுர்கா எஸ்.பி., தர்மேந்திர குமார் மீனா உத்தரவிட்டார்.ராஜண்ணா நடத்திய விசாரணையில், ரத்னம்மாவின் புகாரை ஏற்காமல், ஏ.எஸ்.ஐ., முஸ்டூரப்பா பணியில் அலட்சியம் காட்டியது தெரிந்தது. இதுதொடர்பான அறிக்கை எஸ்.பி.,யிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், முஸ்டூரப்பாவை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., தர்மேந்திர குமார் மீனா நேற்று உத்தரவிட்டார்.