உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுத்தம் திட்டத்துக்கு அதிகாரிகளால் பின்னடைவு

சுத்தம் திட்டத்துக்கு அதிகாரிகளால் பின்னடைவு

பெங்களூரு : மாணவியரின் சுகாதாரத்தை மனதில் கொண்டு, செயல்படுத்தப்பட்ட, 'சுத்தம்' திட்டத்துக்கு, அதிகாரிகளின் அலட்சியத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பள்ளி மாணவியர் மாதவிடாய் சுழற்சியின் போது, ஏற்படும் தர்ம சங்கடத்தை தவிர்க்கவும், அவர்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தை மனதில் கொண்டும், 2015ல் அன்றைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 'சுத்தம்' திட்டத்தை செயல்படுத்தியது.மாணவியருக்கு மாதந்தோறும், இலவச சானிடரி நாப்கின் வழங்குவதே, 'சுத்தம்' திட்டத்தின் நோக்கமாகும். இது மாணவியருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் நாளடைவில் திட்டத்துக்கு, அதிகாரிகளின் அலட்சியத்தால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2020ல் கொரோனா பரவிய பின், 'சுத்தம்' திட்டம் சரியாக செயல்படவில்லை. முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.மற்றொரு பக்கம் சானிடரி நாப்கின்களை, அறிவியல் ரீதியில் அழிக்கவும், நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிகளில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும் மாணவியர், இதை மாற்றும் போது, சிலர் கழிப்பறை குப்பை டப்பாவில் போடுகின்றனர்; சிலர் திறந்த வெளியில் வீசுகின்றனர். இவற்றை துப்புரவு தொழிலாளர்கள், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே அப்புறப்படுத்துகின்றனர். இதனால் பள்ளியின் சுற்றுச்சூழல் அசுத்தமாகிறது.ராம்நகர் மாவட்டத்தின் சில பள்ளிகளுக்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், நாப்கின்களை எரிக்கும், 'இன்சினேட்டர்'களை வழங்கின. இந்த இயந்திரங்களை பள்ளிகள் சரியாக நிர்வகிக்காததால் மாணவியரால் பயன்படுத்த முடியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரு நல்ல திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுத்தம் திட்டத்தின் கீழ், இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டம், தற்போதைக்கு நிறுத்தப்பட்டது உண்மைதான். இதை மீண்டும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ