காங்கிரசில் பஜ்ரங், வினேஷ் போகத்? ராகுலுடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு!
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் நேற்று சந்தித்து பேசினர். இதனால், காங்கிரசில் அவர்கள் இணைந்து, ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 66 வேட்பாளர்களின் பெயர்களை, காங்., மேலிடம் இறுதி செய்து விட்டது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியிலும், அக்கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலை, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அரசியல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்து, ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ல், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து, டில்லின் ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீரர் - வீராங்கனையர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் முக்கிய பங்கு வகித்தனர்.இந்த சூழலில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ராகுலை சந்தித்து பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விரைவில் தெளிவு கிடைக்கும்!தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் பெயர்கள் இல்லை. அது குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இது தொடர்பாக விரைவில் தெளிவு கிடைக்கும்.- தீபக் பபாரியாஹரியானா மேலிட பொறுப்பாளர், காங்.,