உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்லாரியில் பெண் வாக்காளர்கள் அதிகம்: வேட்பாளராக்க விரும்பாத தேசிய கட்சிகள்

பல்லாரியில் பெண் வாக்காளர்கள் அதிகம்: வேட்பாளராக்க விரும்பாத தேசிய கட்சிகள்

காங்கிரஸ் மேலிட தலைவி சோனியாவுக்கு, அரசியல் மறுவாழ்வு அளித்த பல்லாரி லோக்சபா தொகுதியில், இம்முறை ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.மத்திய முன்னாள் அமைச்சர் பசவ ராஜேஸ்வரி, காங்கிரசின் சோனியா, பா.ஜ.,வின் சுஷ்மா சுவராஜ், பா.ஜ.,வின் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தா போன்றோர் பல்லாரியில் போட்டியிட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்தனர்.இம்முறை லோக்சபா தேர்தலில், ஒரு பெண் வேட்பாளரும் இல்லை. தேசிய கட்சிகள், அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி ஆகியவையும், ஆண்களையே களமிறக்கியுள்ளன. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்பாளர்கள் முன்வரவில்லை.

19 தேர்தல்கள்

கடந்த 1952 முதல் 2019 வரை பல்லாரி லோக்சபா தொகுதிக்கு 19 முறை தேர்தல்கள் நடந்தன. இவற்றில் இரண்டு இடைத்தேர்தல்களாகும். 1984ல் முதன் முறையாக பெண் வேட்பாளர் களமிறங்கினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பசவ ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். பல்லாரி தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உள்ளது.அதன்பின் 1989, 1991 தேர்தல்களிலும், இவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். மூன்று தேர்தல்களில் களத்தில் இருந்த பெண் வேட்பாளர் இவர் மட்டுமே. 1996, 1998ல் பெண்கள் போட்டியிடவில்லை. 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டிலேயே பல்லாரி பரபரப்பான தொகுதியாக இருந்தது.காங்கிரஸ் சார்பில் சோனியா, பா.ஜ., சார்பில் சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சோனியா எம்.பி.,யானார்.இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின், அமேதியிலும் அவர் களமிறங்கி இருந்தார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், அமேதியை தக்க வைத்துக்கொண்டு, பல்லாரி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இவரால் காலியான தொகுதிக்கு, 2000ல் இடைத்தேர்தல் நடந்தது. அப்போதும் பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.

சுயேச்சை

கடந்த 2004 லோக்சபா தேர்தலில், கவுசியா பேகம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்த வேளையில் களத்தில் இருந்த ஒரே பெண் வேட்பாளர். இவர் தோல்வி அடைந்தாலும், 10,306 ஓட்டுகள் பெற்றிருந்தார். 2009ல் பா.ஜ., வேட்பாளராக சாந்தா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் கூட களத்தில் இருந்த ஒரே பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.தன் அண்ணன் ஸ்ரீராமுலுவுக்கு, பல்லாரி தொகுதியை சாந்தா விட்டுக் கொடுத்தார். அந்த தேர்தலிலும் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. 2018ல் ஸ்ரீராமுலு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் சாந்தா போட்டியிட்டு, காங்கிரசின் உக்ரப்பாவிடம் தோற்றார்.கடந்த லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் 12 பேர் களத்தில் இருந்தனர். இதில் பெண் வேட்பாளர்கள் ஒருவரும் இல்லை. இம்முறை நடக்கும் தேர்தலிலும், பெண்கள் களமிறங்க ஆர்வம் காண்பிக்கவில்லை.பல்லாரியில் 2024 வாக்காளர் பட்டியலின்படி, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 51 ஆயிரத்து 522 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்து 961 ஆக உள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் பெண் வேட்பாளர்கள் களத்தில் இல்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை