ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பிரதமருக்கு செல்லும் இளகல் சேலை
பாகல்கோட், : சர்வதேச அளவில் புகழ் பெற்ற இளகல் சேலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி கவனத்துக்கு கொண்டு செல்ல, நெசவாளர் சேலையை தயாரித்து உள்ளார்.சமீப நாட்களாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளால், இளைஞர்கள், நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடன் வாங்குவோர் அதை செலுத்த முடியாமல் பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.இதனால் வேதனை அடைந்த பாகல்கோட் மாவட்டம் இளகல்லை சேர்ந்த மேகராஜ் குத்தட்டி, ஆன்லைன் செயலிகளுக்கு தடை செய்யும் வகையில், சேலை ஒன்றை நெய்துள்ளார்.சேலையில், 'ரம்மி மற்றும் டிரீம் 11 செயலிகளை பேன் இன் இந்தியா' என நெய்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், ''ஆன்லைன் செயலிகளால், குறிப்பாக இளைஞர்கள், நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகின்றனர். இவர்களின் குடும்பத்தினரின் துயரத்தை போக்கவே, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று சேலை நெய்து உள்ளோம். இதை பிரதமர் நரேந்திர மோடி கவனத்துக்கு கொண்டு செல்ல அனுப்ப உள்ளேன்,'' என்றார்.இதற்கு முன், சந்திரயான் - 3 விண்கலம் வெற்றி பெற்ற போதும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட போதும் நினைவுகூறும் வகையில் சேலையில் சந்திரயான் - 3, ராமர் கோவில் நெய்தது குறிப்பிடத்தக்கது.