| ADDED : ஆக 16, 2024 12:39 AM
புதுடில்லி, வங்கி கடன் மோசடி தொடர்பான விசாரணையில், அவந்தா குழுமத்தின், 678 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் அவந்தா குழுமத்தின் கீழ், 'சி.ஜி.பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைகளில், தங்கள் நிறுவனத்தின் நிதி நிலைமையை குறைத்து மதிப்பிட்டு காட்டியது, கடந்த 2019ல் தெரியவந்தது.இது தொடர்பான விசாரணையின்போது, பாரத ஸ்டேட் வங்கியில் கடனாக பெறப்பட்ட 2,435 கோடி ரூபாயில், 1,307.06 கோடி ரூபாய் அவந்தா குழுமத்துக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.சி.பி.ஐ., விசாரித்த இந்த வழக்கு, வங்கி மோசடி விவகாரம் என்பதால் அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, அவந்தா குழும நிறுவனர் கவுதம் தாப்பர், சி.ஜி.பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி மாதவ் ஆச்சார்யா உள்ளிட்டோர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அவந்தா குழுமத்துக்கு சொந்தமான, 14 கோடி ரூபாய் சொத்துக்கள் அமலாக்கத் துறையால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 678 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.