உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.50,000க்காக அடித்து கொலை மே.வங்கத்தில் தொடரும் வன்முறை

ரூ.50,000க்காக அடித்து கொலை மே.வங்கத்தில் தொடரும் வன்முறை

கோல்கட்டா,மேற்கு வங்கத்தில் 50,000 ரூபாய் கடனை திருப்பித் தராதவர், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இங்கு, தலிபான் நிர்வாகம் போல் தண்டனை கொடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பொது இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுதினமே, வாங்கிய கடனை திருப்பித் தராத நபர் ஒருவர் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரை அடுத்த நைடா மல்பஹார்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மன்னா என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை அவர் திருப்பித் தராத நிலையில், இரு தினங்களுக்கு முன் அவர் மாயமாகியுள்ளார். கடனை கொடுத்தவர், மன்னாவை கடத்திச் சென்று தன் நண்பர் வீட்டில் அடைத்து வைத்ததுடன், மயக்கமடையும் வரை இருவரும் சேர்ந்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் தாய் மற்றும் மனைவி சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பலியானார். கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 28ம் தேதி துவங்கி, நான்கு நாட்களாக தொடர்ந்து இது போன்ற வன்முறை சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் அரங்கேறி வருவது, அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெண் உட்பட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பொது இடங்களில் தண்டனை கொடுக்கப்படும் சம்பவங்கள் நடப்பது வழக்கம். தற்போது மேற்கு வங்கத்திலும் அது போன்ற சம்பவங்கள் நடப்பது, மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை