பெங்களூரு : பெங்களூரில் சட்டவிரோதமாக பிளக்ஸ், பேனர்களை அச்சிடும் அச்சகத்தின் லைசென்சை ரத்து செய்ய, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் விதிமீறலான விளம்பர போர்டுகளால், நகரின் அழகு பாழாகிறது. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் பலமுறை கர்நாடக உயர்நீதிமன்றத்தில், பொது நலன் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், சட்டவிரோத விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்தும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் உத்தரவிடும் போது, போர்க்கால நடவடிக்கை எடுத்து, விளம்பர போர்டுகள், பிளக்ஸ்கள், பேனர்களை அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அதன்பின் மவுனமாகின்றனர். இதன் விளைவாக, நகரில் சட்டவிரோத விளம்பர போர்டுகள் அதிகரிக்கின்றன. இதை தீவிரமாக கருதிய உயர்நீதிமன்றம், தன் உத்தரவுகளை அலட்சியபடுத்திய மாநகராட்சி மற்றும் மாநில அரசை, சமீபத்தில் வன்மையாக கண்டித்தது. தன் உத்தரவுக்கு மதிப்பில்லையா என, காட்டமாக கேள்வி எழுப்பியது.உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய பின், விழித்துக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், விதிமீறலான விளம்பர போர்டுகள், பிளக்ஸ், பேனர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.விதிமீறலாக விளம்பரம் அச்சிட்டு தரும் அச்சகங்களின் லைசென்சை ரத்து செய்ய, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரில் தற்போது பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் அரசு விளம்பர போர்டுகளுக்கு மட்டும் அனுமதி உள்ளது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட திட்டங்களை தவிர, வேறு எந்தவிதமான வர்த்தக விளம்பர போர்டுகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நகரின் பல இடங்களில், சட்டவிரோதமாக விளம்பர போர்டுகள், பிளக்ஸ், பேனர்கள் வைக்கின்றனர்.இதற்கு கடிவாளம் போட, நாங்கள் தயாராகிறோம். விளம்பர போர்டுகளை அச்சிடும் முன், அவைகளை அச்சிடும்படி ஆர்டர் கொடுத்தவர், மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளாரா என்பதை, ஆய்வு செய்து ஆவணங்கள் பெற வேண்டும்.பிளக்ஸ், பேனர்கள் அச்சிட மாநகராட்சியின் விளம்பர பிரிவின் அனுமதி கட்டாயம். அனுமதி கடிதத்தை காண்பித்தால் மட்டுமே, விளம்பர போர்டுகளை அச்சிட்டு கொடுக்க வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, எளிதில் கரையும் பொருட்களை மட்டுமே, விளம்பர போர்டுகள் அச்சிட பயன்படுத்த வேண்டும்.எந்த காரணத்தை கொண்டும், பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் கலந்த பொருட்களை பயன்படுத்த கூடாது. அனுமதி இல்லாமல், விளம்பரங்கள் அச்சிட்டு கொடுத்தால், சம்பந்தப்பட்ட அச்சகத்தின் வர்த்தக லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.