UPDATED : மே 09, 2024 10:18 AM | ADDED : மே 09, 2024 06:32 AM
பெங்களூரு : சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் 'வீடியோ' வெளியிட்டதாகக் கூறி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மற்றும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆகியோருக்கு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக பா.ஜ.,வின் சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ தேர்தல் நடத்தை விதிமீறல் என, அம்மாநில காங்கிரஸ் போலீசில் புகார் அளித்தது. அந்த வீடியோவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் முஸ்லிம்களுக்கு அதிக இட ஒதுக்கீடு தந்து, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினருக்கான இட ஒதுக்கீட்டை பறிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவை நீக்கும்படி, 'எக்ஸ்' சமூக வலைதளத்திற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா மற்றும் கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நட்டா மற்றும் அமித் மால்வியாவை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி தேர்தல் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.