பெங்களூரு : பெங்களூரு அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத காங்கிரஸ் அரசை கண்டித்து, வரும் 28ம் தேதி, பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.பெங்களூரு அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், அக்கட்சியின் பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் மேயர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோருடன் நேற்று மல்லேஸ்வரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஆலோசனை கூட்டத்துக்கு பின், விஜயேந்திரா கூறியதாவது:பெங்களூரு நகரின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத, காங்கிரஸ் அரசை கண்டித்து, வரும் 28ம் தேதி அனைத்து வார்டுகளிலும் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.நகர மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய, பா.ஜ., தொடர்ந்து போராடும். வெறும் பெயரளவுக்கு போராட்டம் நடத்தாமல், பெரிய அளவில் நடத்துவோம். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே, சாலைகளில் வாகனங்கள் ஓட முடியாத அளவுக்கு தண்ணீர்தேங்கியது. மாநிலத்தில் அதிகமான மக்கள், வரி செலுத்துவது பெங்களூரில் தான்.காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகியும், இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. நகரின் வளர்ச்சிக்கு 1 ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. சாலைகளில் பள்ளங்கள் தான் காணப்படுகின்றன.குப்பை, கழிவுகள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள், பெங்களூரில் இருந்தும், வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தலைநகர் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி?
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியதாவது:எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, ஒரே ஆண்டில், பெங்களூரு வளர்ச்சிக்கு 7,000 கோடி ரூபாயும்; பசவராஜ் பொம்மை ஆட்சி காலத்தில், 6,700 கோடி ரூபாயும் நிதி தந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு நிதி தந்தனர் என்று சொல்லட்டும்.ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்காமல், தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். சாலையில் ஒரு பள்ளமாவது மூடப்பட்டுள்ளதா; இதற்கு, எவ்வளவு பணம் வழங்கி உள்ளனர்?குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெங்களூரு பெயர், சர்வதேச அளவில் பேசப்பட்டது. 'பிராண்ட்' பெங்களூரு திட்டத்துக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பதை அரசு, தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.