உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலபுரகியில் இன்று அமைச்சரவை கூட்டம்

கலபுரகியில் இன்று அமைச்சரவை கூட்டம்

கலபுரகி,; கலபுரகியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில், கல்யாண கர்நாடகா மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.கலபுரகியில் நேற்று அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, சரண் பிரகாஷ் பாட்டீல் இணைந்து அளித்த பேட்டி:கல்யாண கர்நாடகா பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள கிராம மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை, ஐ.டி., - பி.டி., துறை, கல்வித்துறை, நீர்ப்பாசன துறைகளில் உள்ள அரசு பணிகளை நிரப்புவது குறித்து, இன்று கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களும் ஒரே சீராக வளர்ச்சி அடைய வேண்டும். இதை கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு பின், கலபுரகியில் முதல்வர் சித்தராமையா அமைச்சரவை கூட்டம் நடத்துகிறார். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மான முடிவுகள், நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் சிவகுமார், தன் பயணத்தை பாதியில் முடித்து கொண்டு வருகிறார்.

15,000 பணியிடம்

காங்கிரஸ் ஆட்சியின் போது, கல்யாண கர்நாடகா பகுதியில், 30,000 அரசு பணிகள் நிரப்பப்பட்டன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், இப்பகுதியில் காலியாக உள்ள 15,000 அரசு பணிகள் நிரப்பப்படும். 25,000 கூடுதல் பதவிகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும்.காங்கிரசாரை குறை சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி, குறிப்பிட்ட சமுதாய பெண் குறித்து பேசிய பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீதும், 'போக்சோ' வழக்கை எதிர்கொள்ளும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குறித்தும் ஏன் பேசவில்லை?இடஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரமா ஜோய்சும்; இடஒதுக்கீட்டை ரத்து செய்யவே வந்ததாக கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டேவும் எந்த கட்சியை சேர்ந்தவர்கள்.இவ்வாறு கூறினர்.தற்போதைய கல்யாண கர்நாடகா பகுதிக்கு உட்பட்ட பீதர், கலபுரகி, கொப்பால், ராய்ச்சூர், யாத்கிர், பல்லாரி ஆகியவை ஹைதராபாத் நிஜாமின் வசம் இருந்தன. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியால், ஹைதராபாத் இந்தியா வசமானது.

பஸ்லா அலி கமிஷன்

அதன்பின், மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க, 1953ல் பஸ்லா அலி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன், 1955ல் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.அறிக்கையின்படி, 1956 நவ., 1ம் தேதி 16 மாநிலங்கள், மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அதன்பின், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த அரசுகள், இப்பகுதி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்கவில்லை. இதற்காகவே, தற்போது இங்கு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுகிறது.

முதல் அமைச்சரவை கூட்டம்

குண்டுராவ் 1982ல் முதல்வராக இருந்த போது, இப்பகுதியை வளர்ச்சி அடைய வைக்க அமைச்சரவை கூட்டம் நடத்தினார். அப்போது, இப்பகுதியில் குடிநீர் வினியோகம் மற்றும் ஹைதராபாத் கர்நாடகா மேம்பாட்டு ஆணையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இக்கமிட்டிக்கு, அப்போதைய எம்.எல்.ஏ., தரம்சிங் தலைமை வகிப்பார் என்றும் கூறப்பட்டது.ஆயினும், 10 ஆண்டுகளுக்கு பின்னரே, இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த எந்த முதல்வர்களும், இப்பகுதியை மேம்படுத்த அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை.

2வது கூட்டம்

தென் மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சிக்கு வந்த எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு, 2008ல் கலபுரகியின் மினி மெதோடிஸ் தேவாலயத்தில் அமைச்சரவை கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் நீர்ப்பாசன திட்டம், அடிப்படை வசதிகள், ஹூப்பள்ளி - தார்வாடில் சட்ட பல்லைக்கழகம்; பாகல்கோட்டில் தோட்டக்கலை பல்கலைக்கழகம்; ராய்ச்சூரில் விவசாய பல்லைக்கழகம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து, 2009, 2010லும் எடியூரப்பா தலைமையில் இங்கு கூட்டம் நடந்தது.எடியூரப்பாவுக்கு பின் முதல்வராக பொறுப்பேற்ற சதானந்த கவுடா, இப்பகுதியில் அமைச்சரவை கூட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கோபத்தில் இருந்தனர்.

3வது கூட்டம்

கடந்த 2013ல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு வந்த பின், 2014ல் கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடத்தி, 51 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின், 2018ல் மீண்டும் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது அமைச்சரவை கூட்டம் நடத்தவில்லை.தற்போது, 10 ஆண்டுகளுக்கு பின், இன்று கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதிலாவது தங்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனி செயலகம் அமையுமா?

கலபுரகியில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:கல்யாண கர்நாடகா பகுதி மேம்பாட்டுக்காக, தனி தொழில்கொள்கை உருவாக்கப்படும். இப்பகுதி மக்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், சில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம்.பட்ஜெட்டில் குறிப்பிட்டபடி அனைத்து விஷயங்கள் குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும். பல ஆண்டுகளாக கல்யாண கர்நாடகா பகுதிக்கு, தனி செயலகம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்தும் ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை