புதுடில்லி: மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று நடந்த பிரமாண்டமான, 'ரோடு ேஷா'வில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில், 21 மாநிலங்களில், 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 13 மாநிலங்களில், 88 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.1,000 ஆண்டுகள்இந்நிலையில், மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. இதில், 10 மாநிலங்களில், 92 தொகுதிகளுக்கும், யூனியன் பிரதேசமான தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையு யூனியன் பிரதேசத்தில் உள்ள, இரு லோக்சபா தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.உ.பி.,யில் உள்ள சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, பிரோசாபாத், மெயின்புரி, எட்டா, படவுன், ஆன்லா மற்றும் பரேலி ஆகிய 10 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.அசாமில் நான்கு; பீஹாரில் ஐந்து; சத்தீஸ்கரில் ஏழு; கோவாவில் இரண்டு; குஜராத்தில் 26; கர்நாடகாவில் 14 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேலும், ம.பி.,யில் எட்டு; மஹாராஷ்டிராவில் 11; மேற்கு வங்கத்தில் நான்கு; தாத்ரா - நகர் ஹவேலி மற்றும் டாமன் - டையுவில் இரண்டு; ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சீதாபூர், எடாவா உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட்டு விலக துவங்கிவிட்டனர். காங்., மற்றும் சமாஜ்வாதி இளவரசர்களால் தாஜா செய்யும் அரசியல் செய்யாமல் பிழைப்பு நடத்த முடியாது.காங்., மற்றும் இண்டியா கூட்டணியினர் தங்களை பகடை காய்களாக பயன்படுத்துவதை முஸ்லிம் மக்கள் உணர துவங்கிவிட்டனர். நாட்டில் நிகழும் வளர்ச்சிகளை பார்த்து, அவர்கள் பா.ஜ., பக்கம் வரத்துவங்கிவிட்டனர்.அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நாம் சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறேன். வாரிசுகள்மோடி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.ஆனால், காங்.,கும் சமாஜ்வாதியும் தங்கள் எதிர்காலத்துக்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அரச குடும்பத்து வாரிசுகள் மட்டுமே பிரதமராகவும் முதல்வராகவும் இருக்க முடியும் என்ற மரபை மாற்றியுள்ளேன்.டீ விற்ற ஒருவர் பிரதமர் ஆகியுள்ளார். வரும், 2047ல் உங்கள் மகனும், மகளும் நாட்டுக்கே பிரதமராக வரமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை அயோத்தியில் நடந்த பிரமாண்டமான ரோடு ேஷாவிலும் பிரதமர் பங்கேற்றார்.