உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹுவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு: லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி

மஹுவா மொய்த்ரா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு: லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில், தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கெஜ்ரிவாலை தொடர்ந்து, மஹுவா மொய்த்ராவும் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. அம்மாநில கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்தார். இவர், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டினார்.

வாய்ப்பு

இந்த குற்றச்சாட்டை, மஹுவா மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்தார். இந்த விவகாரம் குறித்து பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ராவின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.எனினும், வரும் லோக்சபா தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட மஹுவா மொய்த்ராவுக்கு திரிணமுல் காங்., வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சி.பி.ஐ.,க்கு, ஊழலுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் லோக்பால் கமிஷன் கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்வதுடன், இறுதி அறிக்கையை, ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியது. இதன்படி, கோல்கட்டாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.இதை அறிந்த திரிணமுல் காங்., தொண்டர்கள், அங்கு குவிந்ததுடன் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, மஹுவா மொய்த்ராவும் கைது செய்யப்படலாம் என, பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் மின்சாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உள்ள அரூப் பிஸ்வாசுக்கும், அவரது சகோதரர் ஸ்வரூப் பிஸ்வாசுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது.

குற்றச்சாட்டு

இது தவிர, அந்நிறுவனங்களிடம் இருந்து ஸ்வரூப் பிஸ்வாசின் வங்கி கணக்குகளுக்கு அதிகளவு பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரி ஏய்ப்பும் செய்ததாகவும் புகார் வந்தது. இது தொடர்பாக, ஸ்வரூப் பிஸ்வாசின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 20ம் தேதி முதல் சோதனை நடத்தினர்.தொடர்ந்து 72 மணி நேரமாக நடந்த இந்த சோதனை, நேற்று நிறைவடைந்தது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி