| ADDED : செப் 04, 2024 01:27 PM
இம்பால்: மணிப்பூரில் வன்முறைக்கு மத்தியில், அமைதியை மீட்டெடுக்க மத்திய படைகள் தவறிவிட்டது என ஆளுங்கட்சி பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார் இமோ சிங் குற்றம்சாட்டி உள்ளார்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை சமீபகாலமாக தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக அவசர நடவடிக்கை எடுக்குமாறு, மணிப்பூர் பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜ்குமார் இமோ சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும் வன்முறைகள் நடப்பது கவலை அளிக்கிறது. அமைதியை மீட்டெடுக்க மத்திய படைகள் தவறிவிட்டது. எந்த பயனும் இல்லாத இந்த பாதுகாப்பு படையினர் எதற்கு?இந்தப் படைகள் வெறும் பார்வையாளர்களாக இருந்தால், அவர்களை அகற்றிவிட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மாநில அரசிடம் ஒப்படைத்துவிடலாம். 16 மாத அமைதியின்மைக்கு பிறகும் கூட, சட்டவிரோத ஆயுதமேந்திய போராளிகளால் நடத்தப்படும் வன்முறையை பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தவில்லை. நிரந்தர அமைதியை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.