| ADDED : மே 03, 2024 12:56 AM
கொச்சி ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதிய நுண்ணியிரினத்துக்கு சந்திரயான் திட்டத்தை கவுரவிக்கும் வகையில், 'பாட்டீலிப்ஸ் சந்திரயானி' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள மண்டபம் கடற்பகுதியில், உயிரினங்கள் தொடர்பான ஆராய்ச்சியில், கேரளாவின் கொச்சி அறிவியல், தொழில்நுட்ப பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்களான பிஜோய் நந்தன் மற்றும் விஷ்ணுதத்தன் ஆகிய இருவரும் கடல் அலைகளுக்கு நடுவே உள்ள வண்டல்களில் இருந்து புதிய நுண்ணுயிரியை சமீபத்தில் கண்டுபிடித்தனர். 'டார்டிகிரேட்' எனக் கூறப்படும் நீர்க் கரடி வகையைச் சேர்ந்த அந்த உயிரினம் குறித்து பிஜோய் நந்தன் கூறியதாவது:பிற டார்டிகிரேட் வகையைப் போல, இந்த உயிரினத்துக்கு எட்டு ஜோடி கால்கள் உள்ளன. அவை அவை 0.15 மி.மீ., நீளமும், 0.04 மி.மீ., அகலமும் உடையது. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும் கடல் வாழ்க்கை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.இந்த இனங்களைக் கையாள்வது மிகவும் கடினமானது. கடலின் அடிமட்டத்தில் வசிப்பதால், அவற்றை ஆராய்வது மிகவும் கடினமாகும். இந்த இனங்களை பற்றி ஆய்வு செய்ய வலுவான சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பு அவசியம். மிகவும் அரிய உயிரினம் என்பதால், இதற்கு சிறந்த பெயர் வைக்க திட்டமிட்டோம்.அதன்படி, நிலவின் தென்துருவத்தில் கால் பதிக்க காரணமாக இருந்த சந்திரயான் திட்டத்தை நினைவுபடுத்தும் வகையில், இந்த உயிரினத்துக்கு பாட்டீலிப்ஸ் சந்திரயானி என பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.