உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அதிரடி

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அதிரடி

புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின், அவரை அதிரடியாக கைது செய்தனர். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கையை வகுத்தது. இதில், பல தனியார் மதுபான அதிபர்கள் பலன் அடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அதை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும்தொடர்ச்சி 16ம் பக்கம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...7ம் பக்கத் தொடர்ச்சிசமீபத்தில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், தன் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.மேலும், 'சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது, ஏப்., 22ல் விசாரணை நடத்தப்படும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில், கைது நடவடிக்கை கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி இன்று கோரிக்கை விடுக்க இருந்தார். இதற்கிடையே, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு வந்த சில மணி நேரங்களில், டில்லியில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். விசாரணைக்கு ஆஜராகும்படி ஒன்பதாவது முறையாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.பின்னர், வீட்டை சோதனையிட தங்களிடம் வாரன்ட் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இரண்டு மணி நேரம் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், கெஜ்ரிவாலின் மடிக்கணியில் இருந்து பல்வேறு, 'டிஜிட்டல்' ஆதாரங்களை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட உள்ளதாக, டில்லியில் தகவல் பரவியது. ஆம் ஆத்மி தொண்டர்கள் அவர் வீட்டின் முன் குவிந்தனர். கெஜ்ரிவால் வீட்டு வாசலில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரது வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சோதனையின் முடிவில், கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். ''கைது செய்யப்பட்டாலும், டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்,'' என, அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
மார் 22, 2024 04:11

எவ்வளவு துணிச்சலான முதல்வர் இவர் ஊழல் செய்வதில் கில்லாடியாக இருந்தாலும் கூட வெளியுலகில் தன்னை உத்தமராக காட்டிக்கொண்டு விசாரணைக்கும் ஒத்துவாராமல் பேட்டிகளில் தன்னை யோக்கிய சிகாமணியாக காட்டிக்கொண்ட கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறைக்கு சபாஷ் சொல்லலாம் தாராளமாக அமலாக்கத்துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுய அதிகாரம் உள்ள அமைப்பு இதில் எதற்க்கு பாஜகவை திட்டுகிண்றீர்க ஊழல் என்றால் அவ்வளவு ஊழல்மதுபான கொள்கையில் பல நிறுவனங்கள் கொழுத்த பணத்தை சம்பாதித்தனஅதற்கு லஞ்சமாக பல நூறு கோடிகள் பெற்றதாக நிரூபணம் ஆனதாலேயே கைது நடவடிக்கை அதற்கு கண்டனம் தெரிவிப்போர் அனைவருமே ஏதோ ஒருவகையில் ஊழலில் சிக்கியிருப்பார்கள் ஊழலுக்கு எதிரான ஆட்சி மோடியின் ஆட்சி என்பதால் இந்த அமலாக்கத்துறையானது தனது பணியினை சிறப்பாக செய்துள்ளது தமிகத்தின் பக்கமும் கொஞ்சம் கவனியுங்கள் என்பதுதான் தமிழக மக்களின் ஆசை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை