| ADDED : ஜூன் 23, 2024 06:41 AM
துமகூரு: துமகூரு மாவட்டம், கொரட்டகரேவின் கோளால பேரூராட்சிக்கு உட்பட்ட லக்கய்யபாளையா கிராமத்தில் வசித்தவர் அனன்யா, 19. இவர் கல்லுாரியில் படித்தார். இவரும், பைரகொண்ட்லு கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமண்ணா, 50, என்பவரும் காதலித்தனர்.ரங்கசாமண்ணா ஏற்கனவே திருமணமானவர். இந்த பொருந்தா காதலுக்கு அனன்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கண்டித்தனர்; புத்திமதி கூறினர். அனன்யா பொருட்படுத்தவில்லை. ரங்கசாமண்ணாவை திருமணம் செய்வதாக, பிடிவாதம் பிடித்தார்.மூன்று நாட்களுக்கு முன்பு, அனன்யா காணாமல் போனார். பல இடங்களில் தேடிய பெற்றோர், கொரட்டகெரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், மொபைல் எண்ணை வைத்து, மாணவியை கண்டுபிடிக்க முயற்சித்தனர். இந்நிலையில் கொரட்டகரே, மாவத்துா ஏரி அருகில், அனன்யாவும், ரங்கசாமண்ணாவும் சென்ற கார் நின்றிருப்பதை, நேற்று மதியம் கண்டுபிடித்தனர். ஏரிக்கரையில் காரை நிறுத்தி, மொபைல் போன்களை உள்ளே வைத்துவிட்டு, இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.இருவரின் செருப்புகளும், ஏரி அருகில் கிடந்தன. எனவே போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், இருவரின் உடல்களை தேடுகின்றனர்.பொருந்தா காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், 50 வயது காதலருடன், கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.