| ADDED : ஜூலை 07, 2024 03:07 AM
ராம்நகர்: ராம்நகர் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் ஆசைப்படுகிறார். தன் ஆசையை பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, குமாரசாமி ஆகியோரிடமும் கூறியுள்ளார்.ஆனால் யோகேஸ்வரை களமிறக்க, குமாரசாமி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. தன் மகன் நிகிலை, சென்னப்பட்டணாவில் களம் இறங்கி வெற்றி பெற வைப்பதுடன், தொகுதியையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று குமாரசாமி கணக்கு போட்டுள்ளார்.இதனால் உஷாரான யோகேஸ்வர், 'சென்னப்பட்டணா தொகுதி கூட்டணி வேட்பாளர் நான் தான்' என நேற்று முன்தினம் கூறினார்.ஒருவேளை கூட்டணி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிடவும் அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னப்பட்டணா தொகுதியிலிருந்து யோகேஸ்வர் ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒரு முறை, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.