பாட்னா : “பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த காரணத்தால் எங்களுக்கு ஓட்டளிக்காத முஸ்லிம்கள், யாதவர்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய மாட்டேன்,” என, ஐக்கிய ஜனதா தள எம்.பி., தேவேஷ் சந்திர தாக்குர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதியில், தே.ஜ., கூட்டணி 30 இடங்களில் வென்றது. புறக்கணிப்பு
ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் மாநில மேல்சபை முன்னாள் தலைவராக இருந்த தேவேஷ் சந்திர தாக்குர், 71, முதல்முறையாக சீதாமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியதாவது: மீனவ சமுதாயத்தினர் எனக்கு ஓட்டளிக்கவில்லை. கால்வார் சமூகத்தினரும் என்னை புறக்கணித்தனர். குஷ்வஹா சமூகத்தினர் தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் அதிக எண்ணிக்கையில் வாய்ப்பளித்ததால், அவர்களும் எனக்கு ஓட்டளிக்கவில்லை.நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த காரணத்தால் முஸ்லிம்களும், யாதவர் சமூகத்தினரும் எங்களுக்கு ஓட்டளிக்கவில்லை. எனவே, அவர்கள் என்னிடம் உதவிகளை எதிர்பார்த்து வந்தால் ஏமாற்றமே மிஞ்சும்.எங்களுக்கு ஓட்டளிக்காத உங்களுக்கு நான் உதவ வேண்டும் என நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்று, முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம் வெளிப்படையாகவே கேட்டேன். அதை ஒப்புக்கொண்ட அந்த நபர், தன் தவறை உணர்ந்து திரும்பினார்.இவ்வாறு அவர் பேசினார்.இது பீஹார் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.“எம்.பி., என்பவர் தொகுதியில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதி,” என, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.,வும் தலைமை செய்தி தொடர்பாளருமான பாய் வீரேந்திரா தெரிவித்துள்ளார்.தேவேஷ் தாக்குரின் இந்த பேச்சுக்கு பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது. உதவும் குணம்
“ஜாதியப் பாகுபாட்டைப் பறைசாற்றும் விதத்தில் விரக்தியை வெளிப்படுத்துவது அரசியலில் வெட்கக் கேடானது. பீஹாரில், 14 சதவீதம் பெரும்பான்மை வகிக்கும் யாதவர்களை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் வெற்றி பெற்றதில்லை,” என, பா.ஜ.,வின் ஓ.பி.சி., பிரிவு தேசிய பொதுச்செயலர் நிகில் ஆனந்த் கருத்து தெரிவித்துஉள்ளார்.இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், “தாக்குர் மூத்த அரசியல்வாதி. மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். தனக்கு ஓட்டளிக்கவில்லையே என்ற விரக்தியில் அவர் பேசி விட்டார். இதை பெரிதுபடுத்த வேண்டாம்,” என்றார்.